சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக காவிரி படுகைகள் வளம் பெற அதிமுக அரசு 2019ம் ஆண்டு ‘நடந்தாய் வாழி காவிரி’ என்ற ஒரு திட்டத்தை முன்னெடுத்தது. ரூ.11,250 கோடி மதிப்பீட்டில் முதல்நிலை திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பிரதமரிடம் நானே நேரில் வழங்கி இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தினேன். நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையிலேயே இந்த திட்டம் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஒன்றிய அரசின் ஆலோசனையின்படி, முதற் கட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தொழில்நுட்ப அனுமதியைப் பெறுவதற்காக ஐதராபாத்தில் உள்ள சுற்றுச்சூழல், பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு, அனுமதியும் பெறப்பட்டது. இந்நிலையில் 2021ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையிலும், இத்திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக ஒன்றிய அரசு (2024ம் ஆண்டு) சுமார் ரூ.935 கோடிக்கு ஒப்புதல் அளித்தது.
இதனை ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் செலவிட ஒப்புக்கொள்ளப்பட்டது. ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற சித்தாந்தத்தை நாவளவில் சொல்லி, தங்களை தூய சக்தி என்று அழைத்துக்கொண்டு, தமிழகத்தில் மாற்றம் கொண்டுவருவோம் என்ற முழக்கத்துடன் ஆட்சியில் அமர்ந்துள்ள தவெக அரசு, தமிழக மக்களுக்காகவும், தமிழக விவசாய பெருங்குடி மக்களுக்காவும், புதிதாக எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
‘நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை’ ஒன்றிய அரசின் துணையோடு உடனடியாக துவக்கி பணிகளை முன்னெடுக்க வேண்டும். `வாய்ச் சவடால் அடிப்பது, ரீல்ஸ் விடுவது, குதிரை பேரம் நடத்தி ஆட்சியை காப்பாற்ற முயல்வது’ போன்ற தகிடுதத்த வேலைகளையெல்லாம் கைவிட்டுவிட்டு, விவசாய பெருமக்களுக்கு, குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை செயல்படுத்துமாறு தவெக அரசின் ‘கனவுலக முதலமைச்சரை’ வலியுறுத்துகிறேன்.
