சென்னை: சென்னை தி.நகர் தொகுதி தவெக சார்பில் போட்டியிட்ட ஆனந்த் அதிமுக வேட்பாளரான தி.நகர் சத்தியாவை 13,207 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனந்தின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் பாலசுப்ரமணிய சர்மா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல், ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.பி.பிரபாகரனை 7798 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மனோஜ் பாண்டியனின் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் வி.விபின் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் தேர்தல் வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுவில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்கு மனுதாரர்களுக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அவகாசம் வழங்கி இருந்தார்.
இதற்கிடையில், மானாமதுரை தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. டி.இளங்கோவன் 1205 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஏ.தமிழரசியை தோற்கடித்தார். இளங்கோவன் வெற்றியை எதிர்த்து தமிழரசி தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த 5 வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்குகள் குறித்து ஆனந்த், மனோஜ் பாண்டியன், தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தள்ளிவைத்தார்.
