லண்டனில் இந்திய மாணவி கத்தியால் குத்தி கொடூர கொலை: நிலத்தை விற்று படிக்க அனுப்பிய பெற்றோர் கதறல்

லண்டன்: பஞ்சாப் மாநிலம் டர்ன் தாரன் பகுதியை சேர்ந்த கிரந்தீப் கவுர் (24). இவர், 2 வருடத்துக்கு முன் மாணவர் விசாவில் இங்கிலாந்து சென்று படித்து முடித்தார். பின்னர், அங்கேயே ஆக்ஸ்பிரிட்ஜ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த 12ம் தேதி தனது அறையில் கிரந்தீப் தூங்கி கொண்டிருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த மர்மநபர், அவரை தாக்கினார். பின்னர், தனது பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து கிரந்தீப்பின் வயிறு மற்றும் நெஞ்சு பகுதியில் 5 முறை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கிரந்தீப் உயிரிழந்தார். தகவலறிந்து லண்டன் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

குற்றவாளி கையில் கத்தியுடன் வீட்டின் வாசலை கடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் இங்கிலாந்தை சேர்ந்த 44 வயதான டேனியல் சின் ஜேம்ஸ் என தெரியவந்தது. மேலும், 20 வயது இளைஞருடன் வாக்குவாதம் செய்து, அவரை கத்தியால் குத்திவிட்டு போலீசாரிடமிருந்து தப்பித்து கிரந்தீப் கவுரின் வீட்டிற்குள் டேனியல் நுழைந்துள்ளார். கிரந்தீப்பை கண்டதும், போலீசில் காட்டி கொடுத்துவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரை கொலை செய்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து டேனியலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கிரந்தீப்பின் தந்தை சுக்தேவ் சிங் மற்றும் தாய் பால்ஜித் கவுர் ஆகியோர் தங்களது நிலத்தை விற்று, மகளை லண்டனில் படிக்க வைப்பதற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளனர். தற்போது மகளின் மரண செய்தி அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உடலை இந்தியாவிற்கு கொண்டு வர ஒன்றிய அரசுக்கு அவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: