பெரும்பாலான பொருட்களுக்கு வரி இல்லை இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்

புதுடெல்லி: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலமாக உள்நாட்டில் தயாரிக்கப்படும் பெரும்பாலான பொருட்கள் எவ்வித சுங்க வரியுமின்றி இங்கிலாந்து சந்தைக்குள் நுழைய முடியும். இது குறித்து வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயில் தனது சமூக ஊடக பதிவில், ‘‘இந்தியா -இங்கிலாந்து இடையே விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவை நடைமுறைக்கு வந்துள்ளன.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மேலும் வலுவடையும். இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகள், தொழில்முனைவோர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். ’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் லிண்டி கேமரூன் ஊடக சந்திப்பின்போது, ‘‘நடைமுறைக்கு வந்துள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 99 சதவீதத்திற்கு சுங்கவரி இல்லாத சந்தை அணுகலை உறுதி செய்கிறது. ஜவுளி, தோல் பொருட்கள், ரத்தினங்கள், ஆபரணங்கள், கடல்சார் பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற துறைகளில் இந்திய பொருளாதாரத்திற்கு இது மிகவும் உதவும் ” என்று தெரிவித்துள்ளார்.

* பொருளாதார உறவு ஆழமடையும்: பிரதமர் மோடி
பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இந்தியா -இங்கிலாந்து கூட்டாண்மையில் ஒரு முக்கியமான தருணம். விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவை நடைமுறைக்கு வருவதன் மூலம் நமது பொருளாதாரத் தொடர்புகள் மேலும் ஆழமடையும். இந்த ஒப்பந்தங்கள் இணைந்து நமது கூட்டு லட்சியங்களை மக்களுக்கான உறுதியான வாய்ப்புக்களாக மாற்றுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: