இம்பால்: மணிப்பூரின் சேனாதிபதி மாவட்டத்தில் மகுயிலோங்டி பகுதியில் ஆயுதம் ஏந்தியவர்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அசாம் ரைபிள்ஸ் படையினர் அங்கு விரைந்து ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலைியல் அசாம் ரைபிள்ஸ் படையினருக்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வீரர்களை உள்ளே வரவிடாமல் தடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து வீரர்கள் திரும்பப் பெறப்பட்டதாக தெரிகின்றது. இதனைத்தொடர்ந்து ஒரு கும்பல் இரவு சுமார் 9-30மணியளவில் முகாமிற்கு சென்றனர்.
அங்கு கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த வாகனங்களுக்கும் கும்பல் தீ வைத்தது. மேலும் இரண்டு லாரிகள் மற்றும் கார் ஒன்றையும் கும்பல் சேதப்படுத்தியுள்ளது. நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்த அங்கு மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட கூட்டத்தை கலைப்பதற்கு கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
