சென்னை வந்தடைந்த வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்கள்

சென்னை: வியட்நாம் நாட்டின் சுற்றுலா தளமான பூ குவாக் தீவு அருகே கடந்த 11 ஆம் தேதி சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட இந்தியாவை சேர்ந்த 15 பேர் உயிரிழந்தனர். 32 இந்தியர்கள் உள்ளிட்ட 36 பேர் பயணம் செய்த படகு திடீரென விபத்துக்குள்ளானதில் 16 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்கள் இந்தியா திரும்பினர்.

தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர், கேரளத்தில் இருந்து 2 பேர், ஆந்திராவில் இருந்து 3 பேர் என 15 பேர் உயிரிழந்தனர் அவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் தீவிரமாக மேற்கொண்டது.

குறிப்பாக தமிழக அரசு சார்பில் சிறப்பு அதிகாரி ஒருவர் வியட்நாம் அனுப்பி வைக்கப்பட்டார். விபத்தில் இறந்த இந்தியர்களின் உடல்கள் நேற்று மும்பை கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட்டது. வேலூரைச் சேர்ந்த வினய்குமார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவிசங்கர் உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் இறந்தவர்களின் உடல்கள் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் 2 நபர்களுடைய உடல்கள் இன்று 12 மணியளவில் மற்றொரு விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட இருக்கின்றது. அதே போன்று மும்பையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு திருச்சி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்தவர்களுடைய உடல்கள் என மொத்தம் 6 பேரின் உடல்கள் கோவை விமான நிலையம் அனுப்பப்பட்டு அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது.

 

Related Stories: