ரூ.100 கோடி கோயில் நிலம் முறைகேடு பதிவு பழநி சார்பதிவாளர் மீது போலீசில் புகார்

பழநி: பழநியில் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், சார்பதிவாளர் மீது கோயில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி மலையடிவாரம் ஆண்டவன் பூங்கா சாலையில், தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமாக ரூ.100 கோடி சந்தை மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் உள்ளது.

பழநி மலைக்கோயிலுக்கான கைங்கர்யம் நடத்த இந்த நிலத்தை யாரும் விற்பனை செய்ய முடியாது. ஆனால், இந்த இடம் திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் மற்றும் தண்டபாணி சுவாமிகள் டிரஸ்ட் சார்பில், கடந்த 7ம் தேதி ரூ.2 கோடிக்கு தனியார் இருவருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கண்காணிப்பாளர் (நிலங்கள் பிரிவு) முருகானந்தம் (55) சம்பவம் தொடர்பாக பழநி அடிவாரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில், சுயலாப நோக்கத்துடன், அதிகார துஷ்பிரயோகம் செய்து பத்திரப்பதிவு செய்த பழநி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மோசடியாக கிரையம் செய்து கொடுத்த முருகதாஸ், கிரையம் பெற்ற வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது. கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* காங்கிரஸ் நிர்வாகிகள் 3 பேர் சஸ்பெண்ட்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு ெசாந்தமான கோவில்பட்டி பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டப இடத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து மாநில பொதுக்குழு உறுப்பினர் திருப்பதிராஜா, முன்னாள் மாவட்ட தலைவர் காமராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பராயலு ஆகியார் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.  இதுதொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்கள் 3 பேரும் தற்காலிகமாக கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். எனவே காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் இவர்கள் 3 பேரிடமும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் சொத்து மீட்பு குழு தலைவரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: