சென்னை: கரூரில் முதல்வர் பேசியதில் எதை முதன்மைப்படுத்த வேண்டும் என ஊடகங்களை கட்டுப்படுத்த தவெக தரப்பு பேரம் பேசியுள்ளது. தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் நேற்று முன்தினம் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது அவர் வழக்கம் போல தனது பாணியில் 20 நிமிடத்திற்கும் மேல் பல்வேறு விஷயங்களைப் பேசினார்.
விஜய் பேசியதில் பல கருத்துக்கள், விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், கரூரில் முதல்வர் பேசி முடித்ததும் பல்வேறு ஊடகங்களில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழுவில் பணியாற்றும் ஒருவர் அழைத்துள்ளார். அப்போது, முதல்வர் பேசியதில் எதை முதன்மைப்படுத்திச் செய்தி வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ‘‘லஞ்சம் யாரு கேட்டாலும் கொடுக்காதீங்க…இது விஜய் ஆட்சின்னு சொல்லுங்க’’ என விஜய் பேசியதை முதன்மைப்படுத்துமாறு அவர் கூறியுள்ளார்.
இப்போது இந்தச் செயல் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இப்போது முதல்வர் பேசியதில் எதை முதன்மைப்படுத்த வேண்டும் எனச் சொல்பவர்கள், பிறகு எந்தச் செய்தியை வெளியிடவேண்டும், எந்தக் கோணத்தில் வெளியிடவேண்டும் என தணிக்கை செய்யத் தொடங்கிவிடுவார்கள். மேலும், தவெக அரசுக்கு எதிரான செய்திகளை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் செய்வார்கள் என்ற விமர்சனம் பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த தகவலை சில நிருபர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
