சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1987ம் ஆண்டு காவல்துறை நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டிலும், பிற அடக்குமுறைகளிலும் கொல்லப்பட்ட 21 பேர் உள்ளிட்ட 25 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிப்புக்கு உள்ளானவர்களே. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததற்கு அரசின் தவறு காரணமல்ல. ஆனாலும் அவர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலையும், பிற உதவிகளும் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன. இந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் உடனடியாக அரசு வேலை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். கோவை குண்டுவெடிப்பில்…: பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக பாஜ மூத்த தலைவர் அத்வானி கோவை வந்தார். அவரை கொலை செய்வதற்காக கோவை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகளை மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். இதில் 58 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களின் குடும்பத்தினர் இன்றளவும் வாழ்வாதாரத்திற்காக போராடும் நிலையிலேயே உள்ளனர். கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது போல, கொடூர பயங்கரவாதிகளில் நிகழ்த்தப்பட்ட கோவை குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
