மதுரை: அரசு பணத்தில் தவெகவை வளர்ப்பது அநியாயம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: `ஊரான் வீட்டு நெய்யிலே ஸ்வீட் செய்யாதீங்க விஜய் அண்ணா; மக்கள் வரிப்பணத்தில் தவெக கட்சியை வளர்க்காதீர்கள் விஜய் அண்ணா…’ என்று தமிழகமெங்கும் இளைய சமுதாயத்தின் அபயக்குரல் எதிரொலிக்கிறது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த குடும்பங்களை சேர்ந்த 32 பேருக்கு அரசுத்துறை பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.
இது வரலாறு காணாத ஒரு புதிய முறையாக அமைந்துள்ளது. தற்போது முதல்வராக உள்ள விஜய் அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, `தவெக கூட்டத்தில் இறந்ததால் அரசு வேலை, அரசு நிவாரணம்’ என்ற ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த முயல்கிறார். இது இளைய தலைமுறைக்கு அவநம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது. எந்த அரசியல் கட்சியும் இதுவரை செய்யத் துணியாத இந்த அறிவிப்பை வெளியிட்டு அதை செயல்படுத்த முதல்வர் கரூர் செல்கிறார்.
இந்த விழாவை பார்த்து தமிழகத்தின் துடிப்புமிக்க, விழிப்புணர்வு மிக்க இளைய சமுதாயம் கொதித்தெழுந்து, `மக்கள் வரிப்பணத்தில் தவெக கட்சியை வளர்க்க விஜய் அடித்தளம் இடுகிறாரா?’ என்று நியாயம் கேட்டு ஒருவேளை புரட்சியில் இறங்கிவிட்டால் முதல்வர் விஜய் என்ன செய்வார்? அரசு பணத்தில் தவெகவை வளர்க்கும் இந்த அநியாயத்தை தட்டிக்கேட்கும் உரிமை புரட்சி நாம் இளைய சமுதாயத்திலும் ஏற்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மது விலையை உயர்த்த ரூ.800 கோடி லஞ்சம்
தூய்மையான ஊழலற்ற ஆட்சி தருவோம் என கூறிவிட்டு, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை, ஏறத்தாழ ரூ.120 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படுவது குறித்து, முதல்வர் விசாரணை நடத்தி விளக்கம் அளிக்க வேண்டும். மதுபான விலையை உயர்த்துவதற்காக, ஆலை உரிமையாளர்கள் 11 பேரிடம் 800 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்தும் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
