எங்களின் அணைகளே வறட்சியின் பிடியில், இதில் உங்களுக்கு எப்படி.! தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா…

பெங்களூரு: தமிழகத்திற்கு தற்போது காவிரி நீரைத் திறந்துவிட இயலாத நிலையில் உள்ளதாக கர்நாடகா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, போதிய மழையின்மை காரணமாக மாநிலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மற்றும் கர்நாடக அணைகளிலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கர்நாடகாவில் போதிய பருவமழை இல்லாததால் இங்கிருக்கும் அணைகள் நிரம்பவில்லை.எனவே தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது என்று ராமலிங்க ரெட்டி கூறினார். தமிழ்நாட்டுக்கு நீர் தர வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியமும் எங்களுக்கு உத்தரவிடவில்லை.ஏனென்றால் கர்நாடகாவில் நீர் இல்லை என்பது அவர்களுக்கே தெரியும். நீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை வந்ததாக எனக்குத் தெரியவில்லை எனவும் அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறி உள்ளார்.

கர்நாடகாவின் முக்கிய நீர் ஆதாரங்களான கே.ஆர்.எஸ், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகள் அவற்றின் மொத்த கொள்ளளவில் பாதி கூட நிரம்பவில்லை. கடந்த ஆண்டு இதே நேரத்தில் இது 91.7% ஆக இருந்தது. மேற்கண்ட அணைகள் நிரம்புவதற்கு, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இரண்டு வார காலத்திற்குள் சுமார் 400 முதல் 600 மி.மீ வரை கணிசமான மழைப்பொழிவு தேவை. ஆனால் தற்போதைய பருவமழை காலத்தில் எதிர்பார்த்த மழை இல்லாததால் தான் கர்நாடக அணைகள் எதிர்பார்த்த அளவு நிரம்பவில்லை, இதனால் ஆற்றின் கீழ்மட்டப் பகுதிகளில் உள்ள பகுதிகளுக்கு தேவைப்படும் நீர் வழங்குவது கடினமாக உள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, ஜூன் மாதத்தில் 9.91 டி.எம்.சி மற்றும் ஜூலை மாதத்தில் 32 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு நாங்கள் திறந்துவிட வேண்டும். இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட அளவு நீர் இதுவரை திறக்கப்படவில்லை. கர்நாடகாவில் நிலவும் நீர் பற்றாக்குறையை உணர்ந்துள்ளதால், தற்போதைய சூழலில் காவிரி ஆணையம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இந்த சூழலில் கர்நாடக மக்களின் குடிநீர் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். மழை தீவிரமடைந்து அணைகள் நிரம்பினால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: