அங்காரா: ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுடன் இனி எந்த வகையிலும் ஒப்பந்தம் ஏதும் மேற்கொள்ளப்படாது என்றும் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
துருக்கியின் அங்காரா நகரில் நேட்டோ(NATO) உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில், நேட்டோ நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என கூறினார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், என்னைப் பொறுத்தவரை, ஈரானுடனான அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது. அவர்களுடன் இனி எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அவர்கள் மோசமானவர்கள் மற்றும் குணப்படுத்த முடியாதவர்கள்,” என்று காட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது “நேரத்தை வீணடித்த செயல்” என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஜூன் 17-ம் தேதி பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் கையெழுத்தான ‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்’, இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்தியதாக சொல்லப்படும் தாக்குதல்கள் இந்த ஒப்பந்தத்தைச் சிதைத்துள்ளன.
ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவம் ஈரானில் உள்ள 80-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் எண்ணெய் விற்பனை செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமத்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு நேட்டோ(NATO) பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்தை ஈரான் மீறியுள்ள நிலையில், அமெரிக்காவின் பதிலடி மிகவும் அவசியமானது என்று அவர் கூறியுள்ளார்.
