பள்ளி, கல்லூரிகளில் முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் – அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: பள்ளி, கல்லூரிகளில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடத்தியதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கல்வி நிலையங்களில் முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எதிரான மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலரும், வழக்கறிஞருமான வி. கவி கணேசன் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில் கடந்த மாதம் 22ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி, தவெக கட்சியினர் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் கட்சி கொடி, சின்னங்களுடன் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 3,000 மாணவர்களை வெயிலில் அமரச் செய்தது உள்ளிட்ட நிகழ்வுகள் கல்வி நிறுவனங்களின் நோக்கத்திற்கு விரோதமானவை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு அரசியல் நோக்கத்தோடு இருப்பதாகவும், கல்வி நிலையங்களில் அரசியல் நோக்கத்துடன் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க ஏற்கனவே அரசாணை உள்ளதாகவும், கல்வி நிறுவங்களில் அரசியல் மத சித்தாந்தம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என உத்தரவிட்டதை மீறி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. எனவே கல்வி நிறுவங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த அரசாணையை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.

சம்பந்தப்பட்ட அந்த கல்வி நிறுவங்களின் தலைமை பொறுப்பு வகிப்பவர்கள் மற்றும் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யவும் அவர்களுக்கு எதிராக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுருந்தது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: