பல்லடம், ஜூலை 9: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவு மணியம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன் (38). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 5-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை, குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில், சாணார்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் ஆண் ஒருவரின் உடல் மிதப்பதாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் மற்றும் திருப்பூர் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்றனர். பின்னர், கயிறு கட்டி அந்த உடலை மீட்டனர். விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தவர், காணாமல் போன நடராஜன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.
