ஜெருசலேம்: அமெரிக்காவைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு சக்திவாய்ந்த நட்பு நாடுகள் இல்லை என்ற அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார்.சமீபத்தில் ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தை ஆதரித்துப் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், உலகிலேயே இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலமிக்க நட்பு நாடான அமெரிக்காவை அந்நாடு பகைத்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு பலமிக்க நட்பு நாடுகள் இல்லை என்ற கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், ‘எங்களுக்கு இந்தியா என்ற 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஒரு தோழமை நாடு உள்ளது; அங்கு இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருகிறது; ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இந்தியர்களின் பேராதரவு எங்களுக்குத் தொடர்ந்து குவிகிறது’ என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒயிட் ஹவுஸில் இஸ்ரேலுக்கு கிடைத்த மிகச்சிறந்த நண்பர் என்றும், துணை அதிபர் வான்ஸை தாம் மதிப்பதாகவும் கூறிய நெதன்யாகு, அவரது அனைத்துக் கருத்துக்களையும் தாம் ஏற்க வேண்டியதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையே, தெற்கு லெபனானில் உள்ள சில கிறிஸ்துவ கிராமங்கள், தங்களை ஹிஸ்புல்லா அமைப்பினரிடமிருந்து பாதுகாக்க இஸ்ரேலுடன் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக லெபனான் விவகாரத்தில் இஸ்ரேலின் தற்போதைய நிலைப்பாட்டையும் அவர் தனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
