மும்பையில் கனமழை: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

மும்பை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மும்பையின் மன்குர்ட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மும்பையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மான்கூர்டு ஜனதா நகர் பகுதியில் நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மும்பை தீயணைப்புத் துறை மற்றும் உள்ளூர் போலீஸார் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி 32 வயது பெண் ஒருவரும், 2 முதல் 14 வயதுக்குட்பட்ட 5 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் பெரும்பாலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பிருஹன் மும்பை மாநகராட்சி (BMC) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டோம்பிலிலி பகுதியில் உள்ள மைத்ரி ருக்மிணி சதன் மற்றும் சாயா ஆகிய இரண்டு குடியிருப்பு கட்டடங்களைச் சேர்ந்த சுமார் 50 குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மும்பை பெருநகரப் பகுதியில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக 300-க்கும் மேற்பட் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்திற்குள் நடந்த இரண்டு வெவ்வேறு மர விபத்துகளில் சிக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கடந்த ஐந்து நாள்களில் மரங்கள் விழுந்து பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

Related Stories: