தேசிய தரவரிசை பட்டியலில் 5-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட சென்னை ஏர்போர்ட்.!!

சென்னை: இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை விமான நிலையம் 5=ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் டெல்லி மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக நாட்டின் மூன்றாவது பிஸியான விமான நிலையமாக திகழ்ந்த சென்னை ஏர்போர்ட், சமீபத்திய ஆண்டுகளில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களினால் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதற்கு ஓடுதள பற்றாகுறை, பயணிகளுக்கான வசதிகள், விமான சேவை ரத்து உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகிறது. நாட்டில் இருக்கும் சிறந்த விமான நிலயங்களுக்கான தேசிய தரவரிசை பட்டியலில் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு அடுத்து சென்னை விமான நிலையம் 5-ஆம் இடத்தில் உள்ளது இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதனிடையே கொல்கத்தா விமான நிலையம் மிக நெருக்கமான பயணிகள் எண்ணிக்கையுடன் சென்னை விமான நிலையத்தின் 5-ஆம் இடத்திற்கு பலத்த போட்டியை அளித்து வருகிறது. இதனால் சென்னை ஏர்போர்ட் விரைவில் தனது ஐந்தாவது இடத்தையும் இழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) மே 2026-க்கான போக்குவரத்து புள்ளிவிவரங்களின்படி, மே 2026-ல் சென்னை ஏர்போர்ட் சுமார் 1.90 மில்லியன் பயணிகளைக் கையாண்டது; இது 1.87 மில்லியன் பயணிகளைப் பதிவு செய்த கொல்கத்தா ஏர்போர்ட்டை விட சுமார் 34,000 மட்டுமே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல விமான இயக்கங்களைப் பொறுத்தவரை, சென்னை 13,025 விமான இயக்கங்களை பதிவு செய்த நிலையில், கொல்கத்தா 12,080 இயக்கங்களை பதிவு செய்தது, இதிலும் கூட இரு ஏர்போர்ட்களுக்குமான வித்தியாசம் வெறும் 945 மட்டுமே.

சென்னை ஏர்போர்ட்டின் இந்த சரிவு நிலைக்கு முக்கிய விமான நிறுவனங்கள் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் சேவைகளை நிறுத்தியது, பயணிகளுக்கான போதிய வசதிகள் இல்லாமை மற்றும் விமான நிலையத்தின் குறுக்கிடும் ஓடுபாதை அமைப்பால் ஏற்படும் கொள்ளளவு (capacity) சார்ந்த கட்டுப்பாடுகள் போன்றவை காரணமாக இருக்கின்றன என துறைசார் நிபுணர்கள் கருதுகின்றனர்.

Related Stories: