வேதனைகளை சாதனைகளாக மாற்றிய பரதம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘கலையே என் வாழ்க்கையை திசை மாற்றியது. கலை இல்லையேல் நான் இல்லை’’ என்று பேசத் துவங்கினார் காயத்ரி. பரதநாட்டிய கலையை உயிர்மூச்சாகக் கொண்டிருக்கும் இவர் சென்னை, மடிப்பாக்கத்தில் ‘ஸ்ரீ அன்னை நாட்டியாலயா’ என்ற பெயரில் மூன்றரை முதல் எழுபது வயதுடைய சிறார் மற்றும் பெண்களுக்கு பரதநாட்டியம் கற்றுத்தருகிறார். மேலும், கலைக்குழுவினை அமைத்து அதன் மூலம் கடந்த 22 வருடங்களாக நாட்டிய நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். ‘‘எனக்கு நான்கு வயதிருக்கும் போதுதான் பரதம் மற்றும் கர்நாடக இசை மீது ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், நான் விரும்பியது ஒன்று… என் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வு வேறாக இருந்தது.

மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தீராத வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் வலதுபுற சிறுநீரகத்தில் எனக்கு கேன்சர் கட்டி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கீமோதெரபி, ரேடியேஷன் எல்லாம் மேற்கொண்டேன். அதனால் முடிகளை இழந்து மொட்டை அடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கேன்சர் மேலும் பரவாமல் இருக்க கட்டியுடன் ஒரு சிறுநீரகத்தையும் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். அந்த சமயத்தில் நான் உயிர் பிழைத்தால் போதும் என்று என் பெற்றோர் நினைத்தார்கள். விளைவு பத்தாம் வகுப்பிற்கு மேல் என்னால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை’’ என்றவர், அதன் பிறகுதான் கலைக்குள் தன்னை இணைத்துள்ளார்.

‘‘படிக்க முடியவில்லை என்றாலும், எனக்கான ஒரு திறமை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று என் பெற்றோர் விரும்பினார்கள். அதனால் மதுரையில் உள்ள அரசு இசைக் கல்லூரியில் பரதம் மற்றும் கர்நாடக இசையினை கற்றுக் கொண்டேன். என்னுடைய சிறிய வயது ஆசை நிறைவேறியதால் நானும் மிகவும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டேன். பரதம் மற்றும் கர்நாடக இசையில் பட்டம் பெற்றேன். அதன் பிறகு பள்ளிக்கூடங்களில் டான்ஸ் மற்றும் பாட்டாசிரியராக பணிபுரிந்தேன்’’ என்று கூறும் இவருக்கும் அவரின் கணவர்தான் நாட்டியப் பள்ளி அமைக்க முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.

‘‘சிறுநீரகத்தை நீக்கியதாலும் மேலும், என்னுடைய உடல் நிலை காரணமாக எனக்கு குழந்தை பாக்கியம் இருக்காது என்று மருத்துவர்கள் அப்போதே கூறியிருந்தார்கள். அதை தெரிந்தும் என் தூரத்து உறவினரான என் கணவர் என்னை திருமணம் செய்ய முழு மனதுடன் சம்மதித்தார். அவர் என்னிடம், ‘காயத்ரி இந்த ஜென்மம் மட்டும் இல்லை, இனி வரும் ஜென்மங்களிலும் நீதான் எனக்கு மனைவியாக வர வேண்டும்’ என்று கூறிய போது என்னால் என் கண்ணீரை அடக்க முடியவில்லை.

2007ல் எங்களுக்கு திருமணமானது. அதன் பிறகு என் விருப்பம் தெரிந்து கொண்டு எனக்கு நாட்டியப் பள்ளி அமைக்க முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அத்தோடு நில்லாமல் அவர் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பிரபல நாட்டிய கலைஞர் அலர்மேல் வள்ளியிடம் நாட்டிய நாடகம் பற்றி கற்றுக் கொண்டார். ஒரு நாட்டிய நாடகம் அமைக்க தேவையான அனைத்து நுட்பங்களையும் முழுமையாக கற்றது மட்டுமில்லாமல் கலைக்குழு அமைத்து என்னுடைய மாணவிகளுக்கு நாட்டிய நாடகங்களை பல ஊர்களில் அரங்கேற்றினார்.

என் கணவரின் முழு ஒத்துழைப்புடன் தமிழக அரசின் மகாபலிபுரம் மார்கழி கலைவிழா, காரைக்கால் மாங்கனித் திருவிழா, சீரடி கோயில் நாட்டிய அரங்கம், பகவதி அம்மன் கோயில் நாட்டிய அரங்கம், சிதம்பரம் தில்லை அம்பலவாணர் கோயில் நாட்டிய அரங்கம், உத்திரகோசமங்கை நாட்டிய அரங்கம், திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் என ஏராளமான நாட்டிய நாடகங்கள் நிகழ்த்தி பாராட்டுகளை பெற்றோம். ஆனால், அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை.

சிறுநீரகத்தில் வந்தது போல் வயிற்றில் பெரிய கட்டி மீண்டும் வர மறுபடியும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த முறை நான் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்று தான் சொல்ல வேண்டும். நான் தேறி வந்த போது, என் கணவருக்கு வாயில் நாக்கின் கீழே புற்றுநோய் வந்தது. அதைக் கேள்விப்பட்டு எங்க குடும்பத்தில் எல்லோரும் நொறுங்கி போனோம். நான் ரொம்பவே நிலைகுலைந்து போனேன். அந்த காலக்கட்டம் ரொம்பவே கொடியது.

அவரால் தண்ணீர் குடிக்க முடியாது, எச்சில் முழுங்க முடியாது, சாப்பிடவும் கஷ்டப்படுவார். என்னதான் நடந்தாலும் எனக்கு அவர் அவருக்கு நான் என்பதால், மன தைரியத்தை வளர்த்துக் கொண்டு அவருக்கு பக்கபலமாக இருந்தேன். இதைத் ெதாடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டார். ஆனால், புற்றுநோய் பாதிப்பை கீமோதெரபி, ரேடியோதெரபி என் கணவருக்கு தரப்பட்டும் முழுவதுமாக அகற்ற முடியவில்லை. கேன்சர் பாதிப்பு தீவிரமாக சிகிச்சை பலனின்றி 2021ல் காலமானார்’’ என்றவர், ஆன்லைன் மூலமாகவும் பரதம் பயிற்று வருகிறார்.

‘‘இப்போது எனது நாட்டியாலயாவில் எண்பதிற்கும் மேற்பட்ட மாணவிகள் பரதம் கற்று வருகிறார்கள். ஆன்லைன் மூலம் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி போன்ற வெளிநாட்டில் இருந்தும் பெண்கள் கற்று வருகிறார்கள். ஆட்டிசம் பாதித்த பெண் குழந்தைகளுக்கும் பரதம் கற்றுத் தருகிறேன். ஏழை, எளிய பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறேன். அதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. என் மாணவ கண்மணிகளை பெரிய மேடைகளில் நடனமாட வைக்கிறேன். உலக சாதனை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறேன்.

அதன் மூலம் பல விருதுகளை பெற்றிருக்கிறேன். மத்திய அரசின் கீழ் இயங்கும் MAFA அமைப்பின் நாட்டிய பட்டயத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்து அவர்களுக்கு பட்டய சான்றிதழ் பெறச் செய்திருக்கிறேன். எனது நடனப் பயிற்சி மையத்தினை பள்ளியாக மாற்றும் எண்ணம் உள்ளது. பரதநாட்டிய கல்லூரி ஒன்றும் துவங்க வேண்டும். டிரெஸ்ட் அமைத்து ஏழை, எளிய மாணவிகளுக்கு இலவச நடனப் பயிற்சி அளிக்க வேண்டும். இப்படி பல கனவுகள் உள்ளது. ஒவ்வொன்றாக கண்டிப்பாக நிறைவேற்றுவேன்’’ என்றார் காயத்ரி.

தொகுப்பு: விஜயா கண்ணன்

Related Stories: