ஜன்னல்களுக்கு மேக்-அப்!

நன்றி குங்குமம் தோழி

நான்கு சுவர்களுக்குள் நந்தவனம்

ஜன்னலுக்கு மேக்-அப் எப்படி சாத்தியமாகும். ‘மேக்-அப்’ என்பதற்காக அலங்காரப் பொருட்கள் தேவையில்லை. பண்டைய காலம் தொட்டு நாம் போட்டு வந்த திரைச்சீலைகள்தான்
ஜன்னலின் அலங்காரம். துணியில் உள்ள இந்த திரைச்சீலைகளை விதவிதமாக அலங்கரித்துக் கொள்ளலாம். இன்று கணினி யுகத்தில் அனைத்தும் புதுமையாக மாறிவிட்டன. அந்த வரிசையில் திரைச்சீலைகளும் பலவித டிசைன்களில் இன்று மார்க்கெட்டில் உள்ளது.

திரைச்சீலைகளில் பல வகைகள், அதற்கான சாதனங்களும், வசதிகளும் நிறையவே வந்துவிட்டன. பெரிய பெரிய கட்டடங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பங்களாக்கள் போன்ற இடங்களில் நாம் வீட்டில் பயன்படுத்தும் திரைச்சீலைகளை பயன்படுத்தி இருக்க மாட்டார்கள். ஜன்னல், கதவுகளில் பட்டை பட்டையாக தொங்கிக் கொண்டிருக்கும் ‘ரிப்பன்’ போன்ற மடிப்புகள் கொண்ட திரைச்சீலைகளை பார்த்திருப்போம். அதெல்லாம் பெரிய இடங்களுக்குத்தான், சிறிய வீடுகளுக்கு இல்லை என்று நினைத்துக் கொண்டு நாம் அதனை பயன்படுத்துவதில்லை. அதனை ‘பிளைண்ட்ஸ்’ என்று குறிப்பிடுவார்கள். ‘வினிஷியன் பிளைண்ட்ஸ்’ மற்றும் ‘வெர்ட்டிகள் பிளைண்ட்ஸ்’ என இரு வகை உள்ளன. இன்று பெரும்பாலான வீடுகளில் ‘வெர்ட்டிகள் பிளைண்ட்ஸ்’ பயன்படுத்த விரும்புகிறார்கள்.

பொதுவாக ஜன்னல்களுக்கும், கண்ணாடிச் சுவர் அல்லது கண்ணாடி முழுவதும் போடப்பட்ட இடங்களுக்கு வெர்ட்டிகள் பிளைண்ட்ஸ் மிகவும் பொருத்தமாக இருக்கும். பட்டை பட்டையான ரிப்பன்கள் அமைப்பில் இருக்கும். எவ்வளவு காற்றடித்தாலும் பறக்கவே பறக்காது. இவை நம் அறையின் சுவர் நிறத்திற்கு ஏற்றவாறு வண்ணமயமான நிறங்களில் கிடைக்கின்றன. ‘நைலான்’ கயிற்றில் பட்டை ரிப்பன்களை ஒவ்வொன்றாக குட்டி மணிகள் அல்லது திருகுகள் போன்ற அமைப்பில் கோர்த்து விடுவார்கள். ஒரு முனையில் நைலான் கயிறு தொங்கவிடப்பட்டிருக்கும். அதை இழுத்தால் இவை மூடிக் கொள்ளும், வண்ணமயமாகக் காட்சி தரும். மற்றொரு முனையை இழுத்தால் ஒன்றாக ஒரு பக்கம் வந்து விடும்.

உதாரணத்திற்கு குறிப்பிட்ட இடத்தை மேலும் உயரமாகக் காட்ட நினைத்தால் ஜன்னலுக்கும், கண்ணாடி சுவருக்கும் மேல் தொங்க விடவேண்டிய இடத்தை அளவெடுத்து அதற்கு ஏற்ப ஆர்டர் செய்யலாம். இதில் கலர் காம்பினேஷன் வேண்டுமென்றால், நடுவில் ஒரு நிறத்திலும் இரண்டு ஓரங்களிலும் வேறு நிறத்திலும் கூட போட்டுக் கொள்ளலாம். நம்முடைய கற்பனை சக்திக்கும், கலை ரசனைக்கும் ஏற்றவாறு அமைக்கலாம். ஏ.சி. அறை, பெரிய வரவேற்பறை, அலுவலக அறை ேபான்ற இடங்களுக்கு மிக அழகாக இருப்பதுடன், நல்லதொரு ‘ரிச் லுக்’ கிடைக்கும். பராமரிப்பும் சுலபம்.

குறுகிய ஜன்னலை அகலமாகக் காட்ட நினைத்தால் ‘வினிஷியன் பிளைண்ட்ஸ்’ போடலாம். தட்டை தட்டையான தகடுகள் போன்று வரிசையாகக் கோர்த்திருப்பார்கள். இவை பிளாஸ்டிக், மரம், அலுமினியம், மெட்டல் போன்றவற்றில் நம் பட்ஜெட்டுக்கு ஏற்றாற் போல் கிடைக்கிறது. இதிலும் ‘வெர்ட்டிகள் பிளைண்ட்ஸ்’ போன்ற திருகு அமைப்புகள்தான். திருகுக் கயிற்றின் மூலம் முழுவதையும் மூடலாம். காற்றோட்டம் வேண்டுமானால் பாதி திறந்தும் வைக்கலாம். இவற்றிலும் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன.

மேற்புறமும், அடிப்புறமும் ஒரே நிறம் தந்து இடையே வேறு கலர் கூட தரலாம். பார்க்க அழகாகத் தெரியும். உதாரணத்திற்கு மேலும் கீழும் ‘க்ரே’ (grey) நிறமும், நடுவே நீலம் தரலாம். மேலும் கீழும் ‘ரோஸ்’ நிறம் தந்தால் இடையில் நீலமோ, வெள்ளையோ நம் இஷ்டப்படி தரலாம். ஒரு குறுகிய ஜன்னலை பெரிதாக அகலமாகக் காட்ட நினைத்தால், ஜன்னலின் மேற்புறம் வேண்டிய அளவு குறித்துக் கொண்டு, பக்கவாட்டில் இருபுறமும் கொஞ்சம் அதிக இடம் விட்டு, கீழ்வரை வருமாறு பொருத்தச் சொல்லலாம். வீடுகள், கடைகள், அலுவலகங்கள் போன்ற அனைத்து இடங்களுக்கும் போட முடியும். வீட்டின் அனைத்து இடங்களிலும் அலமாரிகள் அமைக்கும் பொழுதே மரத்தினாலான ‘வினிஷியன் பிளைண்ட்ஸ்’ போடலாம். இதற்கு என குறிப்பிட்ட லேசான மரங்களை மட்டுமே பயன்படுத்துவார்கள். வீடு எப்படிப்பட்டதாக இருந்தாலும் அழகாக எடுத்துக்காட்டும்.

சிலர் துணியில் போட்டிருக்கும் திரைச் சீலைகளை வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக மொத்தமாக ஒரு பக்கம் சுருக்கி விடுவார்கள். மீண்டும் சரி செய்யும் பொழுது அவற்றில் சுருக்கங்கள் ஏற்பட்டு பார்க்க ஒரு மாதிரியாகத் தெரியும். ஆனால், ‘பிளைண்ட்ஸ்’ அனைத்து பட்டைகளும் மூடாமல் இடையிடையே வெளிச்சம் கிடைக்கும். கசங்காது. பார்க்கும் போது அறையும் நிறைவாகத் தெரியும். எல்லா ஜன்னல்களுக்குமே ‘பிளைண்ட்ஸ்’ போடலாம். அது சாத்தியப்படாவிடில், ஹால் மற்றும் ஏ.சி. அறைகளுக்குப் போட்டால் நல்ல ‘ரிச் லுக்’ கிடைக்கும். பழமையை விரும்புபவர்கள் துணி திரைச்சீலைகள் தேர்ந்தெடுப்பர். காலகட்டத்திற்கேற்ற மாற்றங்களை செய்ய விரும்புபவர்கள் புதிய அயிட்டங்களை தேர்ந்தெடுப்பர்.

மூங்கில் தட்டி தூசி மற்றும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த பயன்படுத்தியது. இன்று நாம் புதிய முன்னேற்றங்களுடன் அழகிய வடிவில் ‘வெர்ட்டிகள் பிளைண்ட்ஸ்’, ‘வினிஷியன் பிளைண்ட்ஸ்’ பயன்படுத்துகிறோம். வீட்டின் வசதிகளுக்கும், அமைப்புகளுக்கும் நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறோம். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட நம்முடைய பட்ஜெட்டிற்கு ஏற்ப அனைத்தையும் புதுமையாகக் காட்டலாம். நாம் என்ன செய்ய நினைக்கிறோமோ, அதை சிறப்புற செய்வதுதான் முக்கியம். ‘டிராயிங்’ ரூமில் பெரிய கண்ணாடிச் சுவர்கள் இருந்தால், மேலே சொன்ன அலங்காரங்கள் தேவையில்லை என நினைப்பவர்கள் வேறு மாதிரியும் அலங்கரிக்கலாம்.

பழங்காலக் கட்டடங்கள், அரண்மனைகள், பங்களா வீடுகளில் கலர் கலர் கண்ணாடிக் கதவுகள், ஜன்னல்கள் இருக்கும். ஜன்னலின் மேல் பகுதியில் வளைவு ேபான்று இருக்கும். அதில் சிவப்பு, பச்சை, மஞ்சள் போன்ற நிறங்களில் ‘பளிச்’சென தெரியும் நிலைவாயிற்படியின் மேல் பாகம் கூட வண்ணக் கண்ணாடிகளைக் காண முடிந்தது. அது போல் ‘பிளைன்’ ஆக இல்லாமல் பூக்கள், கோடு போன்ற அமைப்புகள் கொண்டவைகளை கண்ணாடியில் எளிதாக ஒட்டும் வடிவில் கிடைக்கின்றன. அதனை ‘கண்ணாடி பிலிம்’ என்பர்.

பொதுவாக கார் கண்ணாடிகளில் கறுப்புப் ‘பிலிம்’ ஒட்டியிருப்போம் அல்லவா… அது போல்தான், சிலர் வீட்டு ஜன்னல்களில் கூட அதிகமான வெளிச்சத்தைக் கட்டுப்படுத்த கறுப்பு நிறத்தில் ஒட்டியிருப்பார்கள். விலையும் மிகக் குறைவுதான். பார்க்கவும் அழகாக இருக்கும். உதாரணத்திற்கு ‘பாத்ரூம்’ ஜன்னல் கண்ணாடிகளில் வெளிப்புறம் தெரியாமல் இருக்கவும், உள்புறம் வெயில் படுமாறு கண்ணாடி பிலிம் ஒட்டலாம்.

பாத்ரூம் டைல்ஸ் நிறத்திற்கேற்றவாறு கண்ணாடி பிலிம் பயன்படுத்தலாம். கண்ணைப் பறிக்கும் டிசைன்கள் இருப்பதால், ஜன்னலின் தோற்றத்திற்கு ஏற்றவாறு அழகுற அமைக்க முடியும். நமக்கு எப்படி அலங்கரித்துக் கொள்வது என்பது முக்கியமோ, அதே போல் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் நம் இஷ்டப்படி அலங்கரித்துப் பார்க்க முடியும். அலங்கரிப்பதோடு நிறுத்தாமல், நல்ல முறையில் பராமரித்தும் வந்தால் எப்பொழுதுமே அழகுதான்.

மெயின் ஜன்னல்களுக்கு மேலே சொன்ன அலங்காரங்களான திரைச் சீலைகள் துணியில் ஆனவை. வெர்ட்டிகள் பிளைண்ட்ஸ், வினிஷியன் பிளைண்ட்ஸ் போன்ற ஏதாவது அலங்காரம் செய்யலாம். உள் அறையின் வாயிற்கதவுகள் போன்ற இடங்களுக்கு ஆடம்பர மணிகளால் அமைக்கப்படும் திரைச்சீலைகள், கிளிஞ்சல்கள், சங்கு மணிகள், பிரம்பு ஓலைகள் மூலம் செய்து தொங்கவிடப்படும் திரைச்சீலைகளை பயன்படுத்தலாம். வீடு முழுவதும் திரைச்சீலைகள் என்ற பெயரில் அதிகமான துணிகள் தொங்கிக் கொண்டிருந்தாலும் அழகைத் தராது.

ஒவ்வொரு இடத்தின் சூழலையும், அந்த இடத்தின் பயன்பாட்டையும் கருத்தில் கோண்டே உள் அலங்காரம் அமைக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு படிக்கும் அறையை எடுத்துக் கொள்வோம். மேசை மேல் புத்தகம் வைத்துக் கொண்டு எழுதும் போதோ, படிக்கும் போதோ முன்னால் உள்ள ஜன்னல் திரைச்சீலைகள் பறந்து விழுந்தால் அது சரியானதொரு செயலாக இருக்காது.

கனமான, அழகிய, ஆடம்பர திரைச்சீலையாக இருந்தால், அவற்றை இரண்டாக அல்லது மூன்றாக சுருக்கி, ‘கிளிப்’ ேபாட்டு ஒரு ‘டிசைன்’ போல காட்டலாம். அப்படிப்பட்ட இடங்களுக்கு பிளைண்ட்ஸ் போடலாம். ஒவ்வொரு ஜன்னலையும் அலங்கரிக்கும் முன், அந்த இடத்தின் அழகு, வெளிச்சம் இடைஞ்சல் இல்லாமல் பார்த்து அமைக்க வேண்டும். மிகவும் சிறிய ஜன்னல் கொண்ட சமையலறையில், வெளிர் நிறம் பயன்படுத்தினால் விளக்கு ஒளிரும் போது நல்ல வெளிச்சமாக எடுத்துக்காட்டும். இதுதான் நிறங்களின் மாயம்.

வாடகை வீட்டில் இருப்பவர்கள் கூட, தங்கள் வீடாக நினைத்து மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை வாங்கி அலங்கரித்து வைக்கலாம். திரைச் சீலைகளை ஒரு அளவில் வாங்கினால் வீடு மாறும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். உயரம் அதிகமாக இருந்தால், மடித்து அடியில் தைத்துக் கொள்ளலாம். பிறகு ஜன்னல் உயரங்களுக்கேற்ப பிரித்துக் கொள்ளலாம். நாம் வசிக்கும் இடம்தான் நம் வீடு என்பதால் போகுமிடத்திற்கு ஏற்ப எளிய அலங்காரங்களை செய்யலாம்.

வீடு கட்டும் பொழுதும் நமக்கு அதன் அழகு தெரியாது. தரை பதித்து, சுவர்கள் பெயின்ட் செய்த பிறகு பார்த்தால் அதன் வடிவம் அழகாகத் தெரியும். மர வேலைப்பாடுகள் செய்தபின் மேலும் பூர்த்தியாகும். பின் ஜன்னல், நிலைப்படிகள், விளக்குகள் என ஒவ்வொன்றும் செய்ய ஆரம்பித்தவுடன் மதிப்பு கூடிக் கொண்டேதான் இருக்கும். எல்லோருக்குமே ‘கனவு இல்லம்’ என்கிற ஆசை இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே அமைகிறது. அதனால் என்ன, சின்ன மாற்றங்களை தந்து, அழகியலை புகுத்தி நாம் வசிக்கும் இடத்தை ‘கனவு இல்ல’மாக மாற்றிக் கொள்ளலாமே!

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாசன்

Related Stories: