மனதில் நிற்கும் பாரதிராஜாவின் கதாபாத்திரப் பெண்கள்

நன்றி குங்குமம் தோழி

செல்லுலாய்ட் பெண்கள்

சமீபத்தில் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் திரைப்படங்களில் உயிர்ப்புடன் உலவிய கற்பனைப் பெண் பாத்திரங்கள் பெரும்பாலும் சமூகத்தில் நம் கண்ணெதிரே நடமாடிக் கொண்டிருப்பவர்களே… ஆனால், இயக்குநரின் அற்புதமான அழகியல் தன்மை கொண்டவர்கள். தன் படங்களில் புதுமுகங்களை – கதாநாயகன், கதாநாயகி மட்டுமல்லாமல் நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்கள் என பலரையும் அறிமுகப்படுத்தியவர். அவர்களில் பலரும் திரைப்படங்களின் வாயிலாகப் பெரும் புகழ் பெற்றவர்கள். ஏறக்குறைய அவர்களில் பலர் திரைஉலகுக்கு வந்து அரை நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருப்பவர்கள்.

மற்றும் சிலரோ 1960, 70களிலேயே சினிமாவின் மீதான காதலால் நடிக்க வந்தும், சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் கிடைத்த சிறு சிறு பட வாய்ப்புகளிலும் நாடகங்களிலும் நடித்துக்கொண்டே, இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவர்களுக்கும் பாரதிராஜா தன் படங்களை, வாய்ப்புகளை வழங்கியதன் மூலம் அவர்களை மறுபிரவேசம் செய்ய வைத்ததோடு, தொடர்ச்சியாக தன் படங்களில் நல்ல வேடங்களை, கதாபாத்திரங்களை வழங்கியதன் மூலம் அவர்களைப் பெரும் புகழடையச் செய்தார். (உ.ம்: கவுண்டமணி, ஜெமினி ராஜேஸ்வரி, ஜி.சீனுவாசன், ஜனகராஜ், கே.கே.சௌந்தர், சதிஸ்ரீ , கமலா காமேஷ் இவர்களுடன் இன்னும் பலரும் உண்டு.)

அசல் கிராமங்களை தரிசிக்க வைத்த படைப்பாளி

70களில் மேலோங்கியிருந்த நாடகத்தனம் நிரம்பிய கதைகள், நம்ப முடியாத செயற்கையான கதாபாத்திரங்கள், ஸ்டுடியோக்களுக்கு உள்ளேயே பெரும்பான்மை படங்கள் சுற்றிச் சுழன்றுகொண்டிருந்த நிலையை மாற்றி அசலான கிராமங்கள், கிராமத்து வீடுகள், வயல் வெளிகள், தோட்டம் துரவுகள், ஆறுகள், மலைகள் என இயற்கையோடு இயைந்த சூழலுக்குத் திரைத்துறையையே இடம் பெயரச் செய்த அற்புதமும் அவரால் நிகழ்ந்தது. இதனால் முழுமையாக ஸ்டுடியோக்கள் தவிர்க்கப்பட்டன. தமிழ்நாடு மட்டுமல்லாமல், அக்கம்பக்கத்து மாநிலங்களிலும் முழுப் படங்களும் எடுக்கப்பட்டன. இவை அனைத்தும் பாரதிராஜாவால் சாத்தியமானது. இவை யாவும் திரையுலகில் நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றங்கள்.

பொருளாதாரம் சார்ந்து மட்டுமல்ல, கலாச்சாரப் பண்பாட்டு ரீதியாகவும் நிகழ்ந்தவை. கிராமங்கள், அதன் அசலான முகங்களையும் சாதிய ரீதியான அடக்குமுறைகள், வேறுபாடுகளையும் தரிசிக்க வைத்த மாற்றம். அதிகம் படிப்பறிவற்ற கிராமத்துப் பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் பேசியவை. வங்காளம், கன்னடம், கேரளத்துப் படங்களில் இவை ஏற்கனவே நிகழ்ந்துகொண்டிருந்தன.

பாரதிராஜாவின் வருகைக்கு முன் வெளிப்புறப் படப்பிடிப்புகளோ, கிராமம் சார்ந்த திரைப்படங்களோ வெளியாகவில்லையா என்றால், இருந்தன. ஆனால், அவை அழகியல் சார்ந்தவையாக, அசல் மண்ணின் முகங்களைப் பிரதிபலிப்பவையாக, வட்டாரங்களின் மொழி வழக்கினைக் கொண்டவையாக இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒரு சில படங்களை மட்டுமே அந்த வரிசையில் வைத்தாலும், அவை முழுமையாக ஸ்டுடியோக்களை புறக்கணிக்கவில்லை என்பதும் நிஜம். ‘16 வயதினிலே’ தேனி மண் மணம் வீசும் கதையமைப்பும் கதாபாத்திரங்களும் இயக்குநர் பாரதிராஜாவுக்குப் பெரும் பலமாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்குமே பெரும் வரப்பிரசாதமாக அமைந்தன. திரையுலகை இவ்வகையில் புரட்டிப் போட்டவர் பாரதிராஜா.

கதாநாயகன் சப்பாணி(கமல்) ஒரு மாற்றுத்திறனாளி; கிராமத்தில் தன் வீட்டுத் திண்ணையில் வயிற்றுப் பிழைப்புக்காகச் சிறு பெட்டிக்கடை நடத்தும் கைம்பெண் குருவம்மாவால் (காந்திமதி) எடுத்து வளர்க்கப்பட்டவன்; அவளுக்கு ஏவல் செய்து வயிறு வளர்ப்பவன். தனக்கென வீடு, வாசல் ஏதுமற்றவன். பள்ளியில் படிக்கும் குருவம்மாவின் மகள் மயில் (தேவி) மீது அன்பும் காதலும் கொண்டவன்; ஆனால், அவளால் வெறுத்து ஒதுக்கப்படுபவன்.

கிராமத்தின் ஒரு பண்ணையாராகவோ, வசதி வாய்ப்புகளைக் கொண்டவனாகவோ, மெத்தப் படித்தவனாகவோ கதாநாயகன் இல்லை. ‘கிழக்கே போகும் ரயில்’ பட நாயகன் பரஞ்சோதி (சுதாகர்) சிகை திருத்தம் செய்யும் நாவிதர் சாதியைச் சார்ந்தவன்; வேண்டா வெறுப்பாகவே அத்தொழிலைச் செய்யக்கூடிய படித்தவனும் கூட., படிப்பும் எழுத்தும் தனக்குப் பரிச்சயமானதுதான் என்பதை நிரூபிக்கும் கவித்துவமான கவிஞன். ‘புதிய வார்ப்புகள்’ பட நாயகன் சண்முகமணி (பாக்யராஜ்), கிராமத்து ஆரம்பப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணி ஏற்க வரும் மற்றொரு கிராமத்து வாலிபன்.

இப்படி தொடர்ச்சியாகப் பல படங்களின் நாயகர்கள் அனைவருமே நடுத்தர வர்க்கத்துக்கும் கீழாக உள்ள எளிய மனிதர்கள்தாம். கதாநாயகிகளும் அவ்வாறே உழைக்கும் வர்க்கத்துப் பெண்கள். விதிவிலக்காகச் சில படங்கள் பின்னாட்களில் வந்தாலும், அந்தப் படத்தின் நாயக, நாயகியர் பலரும் கிராமம் சார்ந்த வாழ்வியலைக் கொண்டவர்கள்தாம். அவர் படங்களின் ஆண் பாத்திரங்களை விட, பெண் கதாபாத்திரங்கள் கதாநாயகிகள் மட்டுமல்ல, குணச்சித்திர நடிகைகளும் வலிமை வாய்ந்தவர்களாகப் படைக்கப்பட்டிருந்தனர்.

இள மயிலும் ஆத்தா குருவம்மாவும்

குருவம்மாவின் பதினாறு வயது மகள் மயில், ‘ஆத்தா நா பத்தாங்கிளாஸ் பாஸாயிட்டேன்’ என்று தேர்வில் வெற்றி பெற்ற செய்தியை ஊருக்கெல்லாம் பறைசாற்றியபடியே ஓடி வரும் அழகான மயில் போன்றவள். அந்தக் கிராமத்திலேயே அதிகம் படித்துத் தேர்வு பெற்றவள் என்ற பெருமிதம் தாய், மகள் இரண்டு பேருக்குமே இருந்ததில் வியப்பேதும் இல்லை.

மயிலுக்கு ஆசிரியப் பயிற்சி பெற்று, பெரிய கொண்டை, மூக்குக்கண்ணாடி, குடை சகிதம் ஆசிரியராக வேண்டும் என்ற கனவும் உள்ளூர இருந்தது. அப்போதைய பெண்களுக்கு ஆசிரியர், செவிலியர் என்பதைத் தாண்டிய கனவுகளும் அபூர்வம்தான். இவை எல்லாவற்றையும் கடந்து அந்த வயதுக்கே உரிய குறுகுறுப்பும், காதல் உணர்வும் மேலோங்கி வருவதும் இயற்கையே. ‘மாட்டு டாக்டராக’ வரும் இளைஞன்(கால்நடை மருத்துவர் சத்தியஜித்) மீதுதான் அவளுக்குக் காதல் வருகிறது.

தன்னையே ஏங்கி ஏங்கிப் பார்த்துச் சுற்றி வரும் சப்பாணி மீது அல்ல. அதுவும் வயதுப் பெண்களின் இயல்புதானே…! ஆனால், அவனோ அவளை நேசிக்காமல் அவளது பருவ வயதையும், அவள் உடலையும் மட்டுமே நேசிப்பவனாக இருக்க, மயில் உடைந்து நொறுங்குவதும், விஷயமறிந்த தாய் அவளை அடிப்பதும் கூட இது ஊராருக்குத் தெரிந்த செய்தியாகி விட்டதே என்ற பதைபதைப்பில் தான்.

படிப்பதைத் தவிர பெரிதாக வேறு எந்த வேலைகளையும் செய்யாமல் செல்லமாக, அதே நேரம் கண்டிப்பாக வளர்க்கப்பட்டவள். தாயின் மறைவுக்குப் பின், மூங்கில் கூடை சகிதம் பின் கொசுவம் வைத்துக் கட்டிக்கொண்ட சேலையுடன், சப்பாணி துணை வர சந்தைக்குப் பொருள் வாங்கச் செல்லும்போதே, தன் வாழ்நாள் கனவான ஆசிரியக் கனவையும் சூழ்நிலையின் பொருட்டு மயில் துறக்க நேர்கிறது.

அதன் பின் அவள் வாழ்க்கையில் பல போராட்டங்களையும் அவதூறுகளையும் எதிர்கொள்ள நேர்கிறது.வீட்டுத் திண்ணையில் பெட்டிக்கடை வைத்துக்கொண்டு, கடைக்கு வருபவர்களிடம் வாய் கொடுத்து ஊர் வம்புகள் அல்லது விஷயங்களை உள்வாங்கிக்கொள்வதும் குருவம்மாவுக்கு வாடிக்கை. கொளுத்தும் வெயிலில் எங்கிருந்தோ தபால் கொண்டுவரும் போஸ்ட்மேனுக்கு மனிதாபிமானத்துடன் சோடா உடைத்துக் கொடுத்துக் குடிக்கச் சொல்லும் இரக்க சுபாவம்,

அதே போலவே வீட்டிலேயே சுற்றி வருவது, வாரந்தோறும் சந்தைக்கு உடன் சென்று கடைக்குத் தேவையான சரக்குகளை வாங்கி வருவது என வீட்டில் ஓர் ஆண்பிள்ளையாக தாய்க்கும் மகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் சப்பாணியின் மீது இரக்கமும் கருணையும் கண்டிப்பும் காட்டுவது, அதே வேளையில் வம்புச் சண்டைக்கு என்று யாராவது வந்தால் அதையும் ஒரு கை பார்ப்பது அதிலும் பக்கத்து வீட்டுக்காரி (ஜெமினி ராஜேஸ்வரி) கோழியைத் திருடி விட்டதாக நினைத்து அவளுடன் ஊரே சுற்றி நின்று வேடிக்கை பார்க்க, ‘தஞ்சாவூர் தவிலாக மாறி’ சண்டையிடுவதும் தென் தமிழகத்து கிராமப்புறப் பெண்களின் பழக்கவழக்கங்கள், பேச்சு வழக்கு என அச்சு அசலாக குருவம்மாவின் பங்களிப்பாக கூடு விட்டுக் கூடு பாய்ந்து காந்திமதி அவ்வளவு கச்சிதமாகச் செய்திருப்பார்.

ஊரில் வேலை வெட்டி இல்லாமல் மந்தையில் உட்கார்ந்து கொண்டு அடாவடித்தனமும் கேலி, கிண்டலும் செய்யும் பரட்டை (ரஜினி)யின் பார்வையில், ‘ஆத்தாளுக்குத் தாவணி போட்டாலும் நல்லாத்தான் இருக்கும்’ என்ற அவனது கற்பனைப் பார்வையில், திருவிழாச் சந்தையில் நிற்கும் பாரவண்டி மீது தாவணி போட்ட இளம் பெண்ணாக, வெற்றிலை வாயை மென்றபடி ஒய்யாரமாக நிற்பாரே அதுவும் கூட அசத்தல்தான்.

கிழக்கே போகும் ரயிலில் வந்த புதியவர்கள்..!

முதல் படத்தில் பெரும்பாலும் ஏற்கனவே அறிமுகமான நடிகர்கள், நடிகைகள் என்றால் இந்தப் படத்தில் முற்றிலும் புதிய முகங்களாக பாஞ்சாலியாக ராதிகா, வெகு இயல்பாகப் பேசும் கன்னியம்மாவாக உஷா குறைந்த நேரமே வந்தாலும் நிறைவான ஒரு பாத்திரம். பாஞ்சாலி, கன்னியம்மா இருவரும் அத்தனை இயல்பாகப் பேசுவதும் நடிப்பதுமாக உள்ளத்தைக் கொள்ளை கொண்டார்கள். இப்படத்தில் பாஞ்சாலியின் கள்ளமில்லாத சிரிப்பும், வசன உச்சரிப்பும் அவருக்கே உரித்தான அலட்சியமான பார்வையும், நளினமற்ற நடையும் ராதிகாவுக்கு பிளஸ்பாயிண்டாக மாறிப் போயின. தமிழை சரியாக உச்சரிக்கவும் முடியாதவர் எனச் சொல்லப்பட்ட ராதிகா, பாரதிராஜாவின் பல படங்களில் நாயகிகளுக்கு இரவல் குரல் கொடுத்தவர்.

அவரது படங்களில் அதிகம் பங்களித்தவரும் அவர்தான். திரையில் தோன்றாவிட்டாலும் ‘முதல் மரியாதை’ குயில் (ராதா), கடலோரக் கவிதைகள் கெங்கம்மா (ரஞ்சனி) இவர்களுக்கு
ராதிகாவின் குரல் அத்தனை வலு சேர்த்தது. கிழக்குச் சீமையிலே, தாஜ்மஹால் போன்ற படங்களிலும் மண் மணம் மாறாத பாத்திரங்கள் அவருக்குக் கிடைத்தன. தன் திரை வாழ்க்கையில் பொன் விழா காணும் நாயகியாக, பொன்னுத்தாயியாக (தாய்க்கிழவி) ஜொலிக்கிறார். உஷா தான் நடித்த புதிய வார்ப்புகள், ஒருதலை ராகம் மற்றும் சில சொற்பமான படங்களிலேயே இயல்பான நடிப்பை அளித்தவராகப் பாராட்டப்பட்டவர், டி.ராஜேந்தரை மணந்து கொண்டு 82லேயே திரையுலக வாழ்க்கையை முற்றிலும் துறந்தவர்.

அக்காளும் மாமனும் மட்டுமே தனக்கு ஆதாரம் என அடைக்கலம் புகும் பாஞ்சாலியின் பெண்மையைச் சூறையாடத் துடிக்கும் அக்காள் கணவன் மருது (கவுண்டமணி), பிள்ளையில்லாததைக் காரணமாக்கி, மனைவி கருத்தம்மாவிடம்(காந்திமதி) மல்லுக்கட்டுவதுடன் பாஞ்சாலியைத் தனக்கு இரண்டாம் தாரமாகக் கட்டி வைக்க வேண்டும் என்று தந்திரத்துடன் பஞ்சாயத்தைக் கூட்டும் அராஜகம், அவனுக்கு ஆதரவாக நிற்கும் ஊர்ப்பெரிய மனிதர்கள் இவர்களோடு மோத முடியாத அப்பாவிப் பெண்ணாக ராதிகாவின் ஆரம்பமே அசத்தல்தான். அடாது பெய்யும் மழையை நிறுத்த ஊரார் அவள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கும் ஐதீகம் என்ற முட்டாள்தனம், வேறு வழியில்லாமல் அதற்கு சம்மதிக்கும் அவளைக் காப்பாற்ற முன்வரும் காதலன், சாதி கடந்த காதலையும் அதற்கான தீர்வையும் சேர்த்தே பேசிய ‘கிழக்கே போகும் ரயில்’ ஓராண்டு காலம் திரையில் ஓடி மக்களை மகிழ்வித்திருக்கிறது.

ரசிகர்களை மிரட்டிய த்ரில்லர் சிகப்பு ரோஜாக்கள்

கிராமங்களும் அந்த மண்ணின் மைந்தர்களும் மட்டுமல்ல, நகரத்து வாசிகளைப் பற்றியும், அந்தச் சூழலையும் கூட தன்னால் சிறப்பாகக் கொடுக்க முடியும் என்று தன்னம்பிக்கையோடு அவரால் கொடுக்கப்பட்ட படங்கள் இன்னும் மிரட்சி அடைய வைத்தன. கிராமத்துப் படங்களோடு அவர் இயக்கம் முடிந்து போகும் என பேசப்பட்ட வாய்களை அடைக்க வைத்து, மிரளவும் வைத்ததன் மூலம் தான் ஒரு கிராமத்துக் கட்டுப்பெட்டி அல்ல என்பதையும் நிரூபித்தார் பாரதிராஜா.

மீண்டும் கமலும் ஸ்ரீ தேவியும். நாயகியாக ஸ்ரீதேவி பொறுமையுடன் அவ்வளவு பாந்தமாகப் பொருந்தினார் என்றால், கமல் மென்மையான மனிதராக முகம் காட்டி, அதற்குப் பின் ஒரு குரூர மனம் கொண்டவனும் இருக்கிறான் என்பதை வெளிப்படுத்தும்போது உண்மையிலேயே அச்சுறுத்தினார். நவநாகரிகப் பெண் சித்ரா (வடிவுக்கரசி) சில காட்சிகளுடன் விடை பெற்றாலும் மறக்க முடியாதவரானார்.

மீண்டும் ஒரு கிராமத்துக் கதையாக புதிய வார்ப்புகளை உருவாக்கினார் பாரதிராஜா. நாயகி ஜோதி(ரதி)யின் திருமணத்தை, அவள் தந்தையும், சகோதரனும், காதலனும் ஊரில் இல்லாத நேரத்தில், அவளுக்கு சம்பந்தமில்லாத எவனோ ஒருவன் தன் சுயநலத்துக்காக, அவள் விரும்பாத ஒருவனுக்கு கட்டாயக் கல்யாணம் நடத்தி வைக்கிறான். இது அவளை வெகுவாக பாதிக்கிறது. அமைதியே வடிவான அவள் உள்ளுக்குள் எரிமலையாகக் குமுறி, உக்கிரமானவளாக மாறி அவன் பாதையிலேயே சென்று அவனைக் கொல்கிறாள். விருப்பமின்றிக் கட்டப்பட்ட தாலியை, அதைக் கட்டியவனே அறுத்துக் கையிலெடுத்துக் கொண்டு அவள் காதலனுடன் இணைத்து வைப்பதோடு, கைம்பெண்ணான பூக்காரப் பெண்ணைக் குழந்தையுடன் ஏற்பதாகச் சொல்லப்படும் இந்தக் கதையும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்ட புதிய வார்ப்பாக ஜெயித்தது.

பிரபலங்களும் கதாபாத்திரங்களானார்கள்

ஏற்கனவே நன்கு பிரபலமானவர்களை, அறியப்பட்டவர்களை கதாபாத்திரத்துக்கு ஏற்றாற்போல் தன் படங்களில் பயன்படுத்தினார். அவர்களில் சிவாஜி கணேசன் முதன்மையானவர். அதுவரை அவர் ஏற்ற பாத்திரங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மலைச்சாமித் தேவரை ‘முதல் மரியாதை’யுடன் நம் கண் முன்னால் நிறுத்தினார்கள் பாரதிராஜாவும் சிவாஜியும். வடிவக்கரசி காது வளர்த்துப் பாம்படம் அணிந்து தன் வயதுக்கு மீறிய தெக்கத்திப் பெண்ணை நம் கண் முன் கொண்டு வந்தார்.

குயிலாக, ஒயிலாக மட்டும் இல்லாமல் ஒரு காட்டுப்பூவைப் போல் ராதா நம் மனங்களிலும் பரிசல் ஓட்டினார். அவர் அறிமுகமான அலைகள் ஓய்வதில்லை படத்தைக் காட்டிலும் இந்தப் படமே அவருக்கு மாஸ்டர் பீஸ். ‘பூங்காத்து திரும்புமா’, ‘நீதானா அந்தக் குயில்’ போன்ற பாடல் வரிகள் மனதை விட்டு அகலாமல் எப்போதும் ரீங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இசை ராஜா எப்போதும் ராஜாகவே ஆட்சி செலுத்துகிறார்.

சிலுக்கு என்றால் ஆண்-பெண் வேறுபாடின்றி தமிழ்நாடு முழுவதுமே சிலிர்த்துக் கொள்ளும். குமரி மாவட்டத்து எலிசி(சில்க் ஸ்மிதா)யாக, நாத்தனார் மேரியின் (ராதா) காதலுக்கு எதிராக நிற்பவள், தன் கணவனின் துரோகச் செயலுக்குப் பின் முற்றிலும் மனம் மாறி மேரியின் காதலுக்குத் துணை நிற்கும் வேடத்தில் முற்றிலும் புதியதொரு சிலுக்கை நாம் திரையில் காண முடிந்தது. மண் வாசனையின் முத்துப்பேச்சி (ரேவதி) தன் ஒவ்வொரு செய்கையிலும் குறும்புத்தனத்திலும் முன் நின்றாள்.

புதுமைப்பெண் வரதட்சணை பிரச்னையை முன்னிறுத்தினாலும் கொஞ்சம் தள்ளியே நின்றாள். கடலோரக் கவிதைகள் ஜெனிபர் (ரேகா) தான் ஏற்ற கிராமத்து வாத்தியாரம்மா வேடத்துக்கு அசலாக நியாயம் செய்தவர். அம்மாவாகவே கமலா காமேஷ் நம் மனங்களை உருகச் செய்தவர். சினிமா நடிகையாக ‘சிறு பொன்மணி அசையும்’ என பாடி ஷூட்டிங் ஸ்பாட்டில் வலம் வந்த வெண்ணிற ஆடை நிர்மலாவும், அதை வேடிக்கை பார்க்கும் அப்பாவி சோலையும் (அருணா) கல்வெட்டு போல் பதிந்தவர்கள். (கல்லுக்குள் ஈரம் படத்தின் இயக்குநர் ஒளிப்பதிவாளர் நிவாஸ். இயக்குநராக மேற்பார்வை மட்டுமே பாரதிராஜா என்றாலும் படம் முழுவதும் அவருடைய தாக்கம் நிறைந்திருந்தது.

வடிவுக்கரசி சென்னைத் தமிழையும் தன்னால் சிறப்பாகப் பேச முடியும் என என் உயிர் தோழனில் நிரூபித்தார். கண்களாலேயே பேசும் சரிதா காது வளர்த்து, ஒற்றைச் சொத்தைப் பல்லோடு வேதம் புதிது படத்தில் அடக்கி வாசித்தார். அமைதியே உருவான பிராமணப் பெண் வைதேகி (அமலா) தன்னால் தந்தையும் காதலனும் உயிரை விட நேர்ந்த குற்ற உணர்வில் மனதுக்குள்ளேயே மருகி மருகி நடித்தார்.

நாடு விடுதலை பெறுவதற்கு முன் கியாஸ் லைட் தூக்கிப் பிழைப்பு நடத்தும் தங்கம் (ஜெயசுதா), தலைமறைவாக இருக்கும் விடுதலைப் போராட்ட வீரர் கந்தசாமி அய்யருக்கு (விஜயகுமார்) உதவுகிறாள். மனதார அவரை நேசிக்கவும் செய்கிறாள். பின் அவர் வருவார் எனக் காத்திருக்கிறாள். அதன் பின் ஐம்பது ஆண்டுகள் பின்னரே அவரை மீண்டும் சந்திக்கிறாள்.

சுதந்திரப் பொன்விழா ஆண்டில் வெளியான இப்படம் சிறந்த மாநிலப் படத்துக்கான விருது வென்றது. சுதந்திரத்தின் பலனை அனுபவிக்கும் சுயநலவாதப் பெரும்பான்மை சமூகத்தார், அவர்கள் இருவரையும் எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதை இப்படம் மிக அழகாக விளக்கியது. ஜெயசுதா மிக அற்புதமாக வயதான வேடத்தை அவ்வளவு தத்ரூபமாக எளிமையாக வெளிப்படுத்தினார்.இத்தனை செழுமையான கதாபாத்திரங்களாக இவ்வளவு பேரையும் நம் மனங்களில் நடமாட வைத்த சூத்திரதாரி இயக்குநர் இமயம் மறைந்து விடவில்லை. எப்போதும் நம் மனங்களில் இப்பாத்திரங்களில் நிலைத்திருப்பார்.

அறிமுக நாயகிகள்

ரதி (ரத்தி அக்னிஹோத்ரி – புதிய வார்ப்புகள்), ராமநாதன்(கல்லுக்குள் ஈரம்), ரோகிணி (நிழல்கள்), பின்னர் இவரே ராது எனப் பெயரை மாற்றிக்கொண்டார். ரவி (நிழல்கள்), ராஜசேகர் (நிழல்கள்), டாக்டர் ராஜசேகர் (புதுமைப்பெண்), ராஜா(கடலோரக் கவிதைகள்), ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சனி, ரமா (என் உயிர் தோழன்), ரேணு (புதுநெல்லு புது நாத்து), ராகுல், ருத்ரா (புது நெல்லு புது நாத்து), ரஞ்சிதா, ராஜஸ்ரீ (கருத்தம்மா), ரியா சென் (தாஜ்மஹால்) பாரதிராஜாவின் முதல் அறிமுக நாயகியான ராதிகாவுக்கு இயல்பாகவே R ஆங்கில எழுத்து அமைந்ததால் தன்னுடைய அறிமுக நாயகிகள் அனைவருக்கும் சென்டிமென்ட்டாக அதே எழுத்தில் பெயர் அமையுமாறு பார்த்துக்கொண்டார்.

R எழுத்து அல்லாமல் பிற நாயகிகள், நடிகர்கள்: சுதாகர், விஜயன்(கிழக்கே போகும் ரயில்), பாக்யராஜ் (நாயகனாக – புதிய வார்ப்புகள்), உஷாராணி, வடிவுக்கரசி, சந்திரசேகர் (புதிய வார்ப்புகள்), மணிவண்ணன் (நிழல்கள்), கார்த்திக், தியாகராஜன், பாண்டியன், அனுராதா வாசுதேவன் (கடலோரக் கவிதைகள்), அருணா (கல்லுக்குள் ஈரம்), விஜயசாந்தி (கல்லுக்குள் ஈரம்), தாசரதி (வேதம் புதிது), பாபு, தென்னவன் (என் உயிர் தோழன்), நெப்போலியன், சுகன்யா, மனோஜ் இப்படி ஒரு நீண்ட பட்டியல் உண்டு. இதில் விடுபட்டவர்களும் கூட இருக்கலாம்.

தொகுப்பு: ஸ்டில்ஸ் ஞானம்

 

Related Stories: