நன்றி குங்குமம் தோழி
தமிழ் கலாச்சாரத்தில் கல்யாணம் முதல் காது குத்து வரை விழா மேடையை அலங்கரிப்பது உறவுகள் வைக்கும் சீர்வரிசைதான். தட்டுகளுக்கு ஒற்றைப்படையில் கணக்கு இருக்கும் என்பதால், அவரவர் வசதிக்கேற்ப பழங்கள், இனிப்புகள் என தொடங்கி பாத்திரங்கள், நகை என சீர்வரிசை தட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக தாய்மாமன் கொண்டு வரும் சீர்வரிசை தட்டுகளுக்குதான் தனிப்பட்ட மரியாதை இன்றளவும் நிலவி வருகிறது. பொதுவாகவே சீர்வரிசை தட்டுகள் மதிப்பாகவும், கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது. இத்தகைய சீர்வரிசை வைப்பதிலும் ட்ரெண்டிங் காட்ட துவங்கிவிட்டனர் நம் மக்கள். பிளேட் டெக்கரேஷன் என்று தனியாக ஒரு துறை வளர்ந்து வருகிறது. அவ்வகையில் இத்துறையில் ‘நாங்கதான் டாப்’ என்கிறார் தாரணி. அவர் ‘சீர்வரிசை’ என்ற பெயரிலேயே பிளேட் டெக்கரேஷன் செய்து வருகிறார்.
‘‘எனக்கு சொந்த ஊர் திருப்பூர். எம்.பி.ஏ. முடிச்சிருக்கேன். சின்ன வயசுலயிருந்தே எனக்கு கிராஃப்ட்டில் ஆர்வம் அதிகம். சின்னச் சின்ன பொருளைக்கூட என் கலைநயத்தால் அழகாக மாற்றிடுவேன். எங்க வீட்டு விழாக்களுக்கே நான்தான் சீர்வரிசை தட்டுகளை கிரியேட்டிவாக டெக்கரேட் செய்வேன். விழாக்களுக்கு வந்தவங்க எல்லோரும் பாராட்ட, அன்று முதல் எங்க வீடு மற்றும் உறவுக்கார விசேஷங்களுக்கு எல்லாம் நான்தான் சீர்வரிசை டெக்கரேட்டர். உறவினர்கள், நண்பர்கள், அவர்களுக்கு தெரிந்தவர்கள் என ஆர்டர் கொடுக்க இதையே ஒரு தொழிலாகவே செய்யலாம்னு எண்ணம் ஏற்பட்டது. ‘சீர்வரிசை’ என்ற பெயரிலேயே பிளேட் டெக்கரேஷனை பிசினஸாக மாற்றிவிட்டேன்’’ என்றார் தாரணி ரகுவரன்.
‘‘கடந்த ஆறு வருடங்களாக இந்த பிசினஸில் இருக்கிறேன். தற்போது சோசியல் மீடியாவால் இந்த பிசினஸ் டிரெண்டாகி வருகிறது. எனக்கு நிறைய வாய்ப்புகள் இன்ஸ்டாகிராம் மூலமாகவே வருகின்றன. அதன் மூலமே நன்றாக வளர்ச்சி அடைந்தேன். ஆனால், இதில் நிறைய போட்டியாளர்கள் உருவாகிவிட்டார்கள். எல்லோரையும் விடவும் சிறப்பாக காட்ட புதுப்புது ஐடியாக்களில் டெக்கரேஷன் செய்கிறோம்.
முக்கியமாக எங்க ஸ்பெஷலே ஈகோ பிரண்ட்லிதான். நாங்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை. மூங்கில் அல்லது தென்னை ஓலைகளால் செய்த கூடையை பயன்படுத்துகிறோம் மற்றும் கூடைகளுக்கு ஆர்கானிக் நிறங்களை கொண்டு தான் வண்ணம் தீட்டுகிறோம். இதனால் சீர் தட்டுகளில் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வைக்கும் போது எவ்வித பாதிப்பும் ஏற்படாது’’ என்றவர், இதுவரை 300க்கும் மேற்பட்ட விழாக்களில் பிளேட் டெக்கரேஷன் செய்துள்ளார்.
‘‘நாங்கள் தற்போது 7 முதல் 101 வரையிலான சீர் தட்டுகள் வரை செய்கிறோம். பட்ஜெட் பொறுத்து தட்டுகளின் அளவும் பொருட்களும் மாறுபடும். வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி கொடுத்தும் டெக்கரேஷன் செய்ய சொல்வார்கள். சிலர் என்னென்ன பொருட்கள் சீர் தட்டில் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதற்கேற்ப நாங்க அலங்காரம் செய்து தருகிறோம். தமிழ்நாடு மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களான மும்பை போன்ற இடங்களுக்கும் டெக்கரேஷன் செய்து கொரியர் செய்கிறோம். வாடிக்கையாளர் தங்களின் விவரங்களை ஒரு வாரம் முன்பே சொல்லிட வேண்டும்.
அதன் பிறகு குறிப்பிட்ட தேதியில் நாங்க டெலிவரி செய்திடுவோம். மேலும், விசேஷங்கள் மற்றும் இடங்களுக்கு ஏற்ப தான் சீர் தட்டில் பொருட்களை அலங்கரிப்போம். காரணம், சில இடங்களுக்கு அனுப்பும் போது காலநிலை காரணமாக பொருட்கள் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. எங்கள் குழுவில் என்னுடன் சேர்ந்து 5 பெண்கள் பணியாற்றுகிறார்கள். பொருட்கள் வாங்க, சீர்வரிசை தட்டுகள் டெலிவரி என அனைத்தும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். எவ்வளவு தூரம் என்றாலும் நானே நேரடியாக போய் டெக்கரேஷன் மற்றும் டெலிவரி செய்கிறேன்.
ஒரு பிளேட்டுக்கு 800 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை ப்ரீமியமாக சார்ஜ் செய்கிறோம். டெக்கரேஷன் மட்டும் என்றால் 250 ரூபாய் முதல் வசூலிக்கிறோம்’’ என்றவர், பிளேட் டெக்கரேஷன் தொடர்பான பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறார். ‘‘தற்போது நன்றாக வளர்ந்து வரும் துறையாக பிளேட் டெக்கரேஷன் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பயனுள்ள பிசினஸ். விழாக்களில் மேடை அலங்காரம் எப்போதும் செய்யப்படுவது. ஆனால், சீர்வரிசை தட்டுகளை மேடையில் வைக்கும் போது அது தனிப்பட்ட கவனத்தை ஈர்க்க செய்கிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டு முறையிலும் பயிற்சி அளிக்கிறேன். ஐந்து நாட்கள் பயிற்சியில் முழுமையாக கற்றுக் கொள்ளலாம்.
பேசிக் முதல் அட்வான்ஸ் வரை பயிற்சிகள் தருகிறேன். பயிற்சிக்கான சான்றிதழ்களும் வழங்குகிறோம். இதுவரை 50க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன். பயிற்சி பெற்றவர்கள் தனியாக பிசினஸும் செய்கிறார்கள். எனக்கு என் குடும்பம் தான் பெரும் பலமே. அவர்கள் செய்யும் உதவியால்தான் நான் நிம்மதியாக உழைக்க முடிகிறது.
மேலும், வாடிக்கையாளர்கள் எங்களை நம்பி வாய்ப்பு வழங்குவதற்கும் இத்தனை வருடங்கள் இதில் சிறப்பாக செயல்படுவதற்கும் காரணம், நாங்க பயன்படுத்தும் தரமான பொருட்கள்தான். உணவுப் பொருட்களிலும் தரத்திற்கு நாங்க முக்கியத்துவம் தருகிறோம். சிறிய பட்ஜெட் என்றாலும் அதிலும் தரம் மாறாது என்பதால், வாடிக்கையாளர்கள் என்னை நாடி வருகிறார்கள். அவர்களின் திருப்தியே என் வெற்றிக்கு காரணம்’’ என்கிறார் தாரணி ரகுவரன்.
தொகுப்பு: கலைச்செல்வி
