சென்னை, ஜூன் 26: சென்னையில் நீடித்து வரும் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை சூழ்நிலையை கருத்தில் கொண்டு, களத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை மாநகராட்சி பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக பெண் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட வெளிப்புற பணியாளர்கள் வெப்ப சோர்வு மற்றும் நீரிழப்பு பாதிப்புகளுக்கு ஆளாகாமல் இருக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநகராட்சி ஆணையர் சமீரன் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, மண்டல அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் பணியாளர்களுக்கு போதிய ஓய்வு நேரம் வழங்க வேண்டும்.
மேலும், அவர்கள் தொடர்ந்து தண்ணீர் மற்றும் பிற திரவ உணவுகளை அருந்தி உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். உச்ச வெயில் நிலவும் மதிய நேரங்களில் நேரடி சூரிய ஒளியில் பணிபுரிவதை முடிந்தவரை தவிர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தூய்மை பணியாளர்களுக்கான பணிநேரங்களில் தளர்வு வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பணியாளர்களை பாதுகாப்பதே இந்த முடிவின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பெண் தூய்மை பணியாளர்களுக்கான தனி கழிவறை வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் 284 இடங்களில் கழிவறை வசதிகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 82 இடங்களில் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அவற்றை அடுத்த 2 வாரங்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், இடப்பற்றாக்குறை காரணமாக நிலுவையில் உள்ள 26 திட்டங்களுக்கு மாற்று இடங்களை கண்டறிந்து பணிகளை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மார்ச் 9 முதல் தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து நீடிப்பதால் இந்த திட்டம் ஜூலை மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு பாதுகாப்புத் தொப்பிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதோடு, சாலைகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் விபத்துகளில் சிக்குவதைத் தடுக்க புதிய பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் சென்னை மாநகராட்சி விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
