×

தவறான சிகிச்சையால் வாலிபர் மரணம்; ரூ.22 லட்சம் கட்டணம் கேட்டதால் மருத்துவமனையை நொறுக்கிய உறவினர்கள்: ஜார்கண்ட்டில் பரபரப்பு

ராஞ்சி: ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலில் ஏற்பட்ட முறிவுக்கு சிகிச்சை பெற்ற வாலிபர் மரணமடைந்த விவகாரத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் லாத்தேஹார் பகுதியைச் சேர்ந்த ராஜு குமார் ரஞ்சன் (18) என்ற வாலிபர், கடந்த மே மாதம் 24ம் தேதி நடந்த சாலை விபத்தில் காலில் காயம் ஏற்பட்டதால் ராஞ்சியில் உள்ள ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 1ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வாலிபரின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததால், காயம் மோசமடைந்து தீவிர கிருமித்தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.  மேலும், வாலிபர் இறந்த பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அவர்களுக்கு ரூபாய் 22 லட்சம் கட்டணம் கேட்டு ரசீது வழங்கியதாகக் கூறப்படும் பிரச்னை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும் சிகிச்சையில் அலட்சியம் மற்றும் கூடுதல் கட்டணக் கொள்ளை குறித்து சமூக வலைதளங்களில் வீடியோக்களையும் வெளியிட்டனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ராஜ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் வீரேந்திர குமார் கூறுகையில், ‘ரூபாய் 22 லட்சம் கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது, காப்பீடு போக குடும்பத்தினர் செலுத்த வேண்டிய தொகை வெறும் 2.4 லட்சம் ரூபாய் மட்டுமே, மேலும் நோயாளியின் காலில் ஏற்பட்ட கடுமையான நசுங்கிய காயம் காரணமாக காலை அகற்ற பரிந்துரைத்தோம், ஆனால் குடும்பத்தினர் அதற்கு சம்மதிக்கவில்லை’ என்று கூறினார்.

இந்த விவகாரம் குறித்து ராஞ்சி துணை ஆணையர் மஞ்சுநாத் பஜந்த்ரி கூறுகையில், ‘ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ராஞ்சி துணை ஆணையருக்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டதை அடுத்து, ராஞ்சி சதர் மருத்துவமனை சிவில் சர்ஜன் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு மருத்துவமனை ஆவணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

Tags : Jharkhand ,Ranchi ,Chief Minister ,Hemant Soren ,Raju Kumar Ranjan ,Latehar ,
× RELATED இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் மீது...