×

இந்தியாவின் ஒற்றுமை, வளர்ச்சிக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்: சியாமா பிரசாத் முகர்ஜி 125வது பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: இந்தியாவின் ஒற்றுமை, வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சியாமா பிரசாத் முகர்ஜி என பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய உணர்வு மற்றும் சுயநலமற்ற சேவை ஆகிய கொள்கைகளைப் போற்றிப் பாதுகாக்கும் நாட்டு மக்களுக்கு ஜூலை 6-ம் தேதியான இன்று ஒரு சிறப்பான நாள். யாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளை நாம் இன்று கொண்டாடுகிறோம். பாரத அன்னை மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலுக்கு காலத்தால் அழியாத ஒரு உதாரணமாக அவரது வாழ்க்கை திகழ்கிறது. நவீன இந்தியாவில், அறிவுத்திறன், பொதுச் சேவை மற்றும் தார்மீக உறுதிப்பாடு ஆகியவற்றின் மிகச்சிறந்த சங்கமமாகத் திகழ்ந்த தலைவர்களில் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு நிகரானவர்கள் மிகச் சிலரே.

பிரிவினையின் சவாலான சூழலிலும், மேற்கு வங்கம் இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகத் தொடர்வதை உறுதிசெய்வதில் அவர் உறுதியாக இருந்தார். அதே உறுதியான கொள்கைதான் அவரை ஜம்மு-காஷ்மீரை நோக்கி ஈர்த்தது. சிறைவாசம் அவரைத் தடுத்து நிறுத்தவில்லை; தனிமைப்படுத்தப்பட்ட சூழலும் அவரது மனவுறுதியை சீர்குலைக்கவில்லை. எண்ணற்ற மக்களின் நலனுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்த முகர்ஜி, சிறைக்காவலில் இருந்தபோது உயிர்நீத்தார். தாம் உறுதியாக நம்பிக்கை கொண்டிருந்த ஒரு லட்சியத்திற்காகவே முகர்ஜி தம் உயிரைத் தியாகம் செய்தார் என்று ஆச்சார்ய வினோபா பாவே குறிப்பிட்டார். பல ஆண்டுகளுக்குப் பின், 2019-ல் அரசியலமைப்பின் 370 மற்றும் 35(ஏ) ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட நிகழ்வு, அவரது தியாகத்திற்குச் செலுத்தப்பட்ட உன்னத மரியாதையாக அமைந்தது.

இந்தியாவின் முதல் தொழில் துறை அமைச்சராக சியாமா பிரசாத் வகித்த பதவிக்காலம், வளர்ச்சி பற்றிய அவரது கண்ணோட்டம் எவ்வளவு விரிவானதாகவும், மனிதத்தன்மை நிறைந்ததாகவும் இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. தாமோதர் பள்ளத்தாக்குக் நிறுவனம், சிந்திரி உரத் தொழிற்சாலை மற்றும் வலுவான தொழில் கொள்கை போன்ற முன்னோடி முன்முயற்சிகள் மூலம் நவீன தொழில்சார் இந்தியாவின் அடித்தளத்தை அமைத்த அதே வேளையில், இந்தியாவின் பாரம்பரிய வலிமைகளும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை அவர் உறுதி செய்தார்.

தனது மனிதாபிமானப் பணிகளுக்காகவும் தனித்து விளங்கினார். 1943-ல் வங்காளத்தில் மிகக் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய்வதில் அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வரும் இவ்வேளையில், அவர் ஆழமாக நம்பிய வலிமையான, ஒற்றுமையான, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் கருணைமிக்க இந்தியாவை உருவாக்க நாள்தோறும் பாடுபடுவதே அவருக்கு நாம் செலுத்தும் மிகச்சிறந்த அஞ்சலியாகும். இன்றைய இளைஞர்களைப் பற்றி நான் நன்கு அறிந்திருப்பதால், அவர்கள் இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு அதைச் சரியாகச் செய்து முடிப்பார்கள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : India ,Modi ,Siama Prasad Mukherjee ,New Delhi ,
× RELATED உபி பேரவை தேர்தல்; பாஜ தலைவர் ஆலோசனை