ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தேங்காய் உரிக்கும் பணியில் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தமிழக தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், நம்பியூர், டி.என்.பாளையம், பெருந்துறை, சென்னிமலை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், பவானி, அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களிலிருந்து தினசரி தேங்காய்களை பறிக்கப்பட்டு வருகின்றன. தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறிக்க, தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. அதேபோன்று, தேங்காயை உரிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள தோட்டங்கள், எண்ணெய் மில்களில் தேங்காய் உரிப்பதற்காக, வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வந்துள்ளனர். இந்த தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல் வேலை செய்வதாலும், குறைந்த கூலிக்கு வேலை செய்வதாலும், பீகார், குஜராத், ஆந்திரா, நேபாளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகளவில், ஈரோட்டில் தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, இந்த தொழிலை நம்பியிருந்த நூற்றுக்கணக்கான தமிழக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேங்காய் உரிக்கும் அந்தியூர் தொழிலாளி கதிர்வேல் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தேங்காய் உரிக்கும் பணியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறோம்.
இதில் ஒரு தொழிலாளி நாள் ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.1,500 வரை சம்பாதிக்கிறார். அதிகபட்சம் தினசரி தலா 2 ஆயிரம் முதல் 2,500 வரை தேங்காய் உரித்து வருகிறோம். ஆனால், சமீப காலமாக, தேங்காய் உரிக்கும் பணிக்கு, வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். அதில் குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வந்துள்ளனர். இந்த தொழிலாளர்களால் சொந்த மாவட்டத்தை சேர்ந்த, அதாவது எங்களை போன்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உள்ளூர் தொழிலாளர்கள் தேங்காய் ஒன்றை உரிக்க ரூ.1 வாங்குகிறோம் என்றால், வடமாநில தொழிலாளர்கள் தேங்காய் ஒன்றுக்கு 80 பைசா முதல் 95 பைசா வரை மட்டுமே வாங்குகின்றனர். எனவே, ஈரோடு மாவட்டத்தில் மிகை எண்ணிக்கையிலான வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, உள்ளுர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறுஅவர் தெரிவித்துள்ளார்.
