லட்சுமி கடாட்சம் என்பது பணத்தை மட்டும் குறிக்குமா?

?சிறியவர்கள் பாத யாத்திரை செல்கிறார்கள். அவர்கள் காலில் விழுந்து வணங்கலாமா?
– வண்ணை கணேசன், சென்னை.
வணங்கலாம். தவறேதும் இல்லை; நியாயமும்கூட! திருநாவுக்கரசு சுவாமிகள், திருஞான சம்பந்தரைப்பற்றிக் கேள்விப்பட்டு, அவரைத் தரிசிக்கச் சென்றார். அதேசமயம், திருநாவுக்கரசரின் வருகையைக் கேள்விப்பட்ட திருஞான சம்பந்தர், அடியார்குள் சூழ்ந்து வரச்சென்று, திருநாவுக்கரசரை எதிர் கொண்டார். அவரைப் பார்த்த உடனேயே அதே விநாடியில் திருஞானசம்பந்தரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார், திருநாவுக்கரசர். திருஞான சம்பந்தர் சிறுவயதுக்காரர். அவரை விடப் பன்மடங்கு அனுபவத்திலும் வயதிலும் பெரியவர், திருநாவுக்கரசர். அப்படிப்பட்ட அவர், “இந்தத் திருஞான சம்பந்தன் என்னை விடச் சிறியவன்’’ என்று எண்ணவில்லை; திருஞான சம்பந்தரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். அப்போது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசருக்குச் சூட்டிய திருநாமம்தான், அப்பர். சேக்கிழார் சுவாமிகள் விரிவாகச் சொல்லும் வரலாற்றுத் தகவல் இது. ஆகவே, சிறியவர்கள் பாத யாத்திரை செல்லும் போது, அவர்களை வணங்குவது நியாயம்தான்.

?கிருஷ்ணர் தன்னை பிரகஸ்பதியின் சொரூபம் என்று கீதையில் சொல்கிறாரே! பிரகஸ்பதி என்பது யார்?
– அண்ணா. அன்பழகன், அந்தணப்பேட்டை.
பிருகஸ்பதி என்பவர், தேவகுரு. தேவர்களுக்குக் குருவாக இருந்து அவர்களைக் கட்டிக் காத்தவர் இவர். அங்காரகனைவிட மிகவும் உயரத்தில் இருப்பவர்; ஜனமேஜய மன்னர் சர்ப்ப யாகம் செய்யும்போது, இவர் அதைத்தடுத்து நிறுத்தியதாக ஞான நூல்கள் விவரிக்கின்றன.

?வெகுதூரம் இருக்கும் குலதெய்வக் கோயிலுக்குச் சென்றால், வேறு கோயில்களுக்கும் போகலாமா? கூடாதா?
– கே.விஸ்வநாத், பெங்களூர்.
போகலாம். வெகுதூரம் இருக்கும் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும்போது, அதன் அருகில் இருக்கும் மற்ற கோயில்களைத் தரிசிக்க விரும்பினால், முதலில் குலதெய்வ வழிபாட்டை முறையாக முடித்துவிட்டு, அதன்பிறகே மற்ற கோயில்களுக்குச் செல்ல வேண்டும்.

?பஞ்சகவ்யம் என்றால் என்ன? அதைப் பற்றிய விளக்கம் தேவை?
– ப.த.தங்கவேலு, பண்ருட்டி.
சிவபெருமானுக்கு உண்டான அபிஷேகப் பொருட்களில் மிகவும் முக்கியமானது பஞ்சகவ்யம். ‘ஆன் ஐந்தும் ஆட்டி அமரர் தொழும் தானந்தம் இல்லாத்தலைவன்’ – எனத் திருமந்திரத்தில் திருமூலர் கூறியிருக்கிறார். சிவபெருமான் அபிஷேகத்திற்கு உண்டான அந்த ஐந்தும், பசுவிடம் இருந்து பெறப்படுகின்றன. பசுவின் ஜலம், பசுஞ்சாணம், பசும்பால், பசும்தயிர், பசும்நெய் எனும் ஐந்தும் சேர்ந்தது பஞ்சகவ்யம். கோ ஜலத்திற்கு வருணனும், பசுஞ்சாணத்திற்கு அக்கினியும், பாலிற்குச் சந்திரனும், தயிருக்கு வாயுவும், நெய்க்கு விஷ்ணுவும் தேவதைகள் என ஞான நூல்கள் கூறுகின்றன. கூடவே, அந்த நூல்கள் சொல்லும் தகவல் விவரம்: சிவப்பு நிறப் பசுவிடம் – கோ ஜலம்; வெள்ளைப் பசுவிடம் – சாணம்; பொன் நிறப் பசுவிடம் – பால்; நீலநிறப்பசுவிடம் – தயிர்; காராம் பசுவிடம் – நெய்; எனக் கொள்வது மிகவும் சிறப்பு!

?ஆரோக்கியமாக இருப்பது எப்படி?
– பார்கவி நாராயணன், மதுரை.
ஆரோக்கியம் என்பது உருவாக்கப்படுவதில்லை. அதுதான் உடம்பின் அடிப்படையான இயல்பு. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நம் உடலைப் படைத்த ஆண்டவன், எத்தகைய நோயையும் தாக்குப் பிடிப்பது போல பல ஏற்பாடுகளை, உடலுக்குள்ளேயே செய்து வைத்திருக்கிறான். நோய்க்கு உரிய கிருமி நம் உடலுக்குள்ளே நுழைவதும், நம்மை அறியாமலேயே நம் உடம்பில் உள்ள மற்ற விஷயங்கள் (immunity) அதை எதிர்கொண்டு தாக்குதல் நடத்தி அடிப்பதும், சதாசர்வ காலமும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஆனால், இதை உணராமல் நோய்களை நாம்தான் வரவேற்று நம்முடைய உடம்பை பலகீனப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

?நாம் உடுத்திய பழைய கிழிந்த உடையை கால் மிதியாக வீடு துடைக்க பயன்படுத்தலாமா?
– எம்.பிரபாகரன், திருப்பத்தூர்.
பயன்படுத்தலாம். ஆனால், அதற்கு முன்னதாக அதனை நன்றாக துவைத்து சூரிய ஒளியில் காய வைத்திருக்க வேண்டும். சூரிய ஒளி என்பது படும்போது, அதில் இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்கிவிடுகிறது. நாம் உடுத்திய துணியை துவைக்காமலும் சூரிய ஒளியில் நன்றாக காய வைக்காமலும் எக்காரணம் கொண்டும் வீடு துடைக்க பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், அது எதிர்மறையான பலன்களைத் தந்துவிடும்.

?தெற்கு நோக்கி வீற்றிருக்கும் அனுமனை வணங்கினால் கூடுதல் பலன் கிட்டும் என்று சொல்கிறார்களே, ஏன்?
– ராஜேந்திரன், மேல்புவனகிரி.
அப்படியெல்லாம் விதிகள் ஏதுமில்லை. அனுமன் எந்த திசையை நோக்கி வீற்றிருந்தாலும் வணங்கலாம். இலங்கை என்பது இங்கிருந்து தென் திசையில் அமைந்திருப்பதால் விஸ்வரூப ஆஞ்சநேயரை அவ்வாறு தெற்கு நோக்கி பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அவ்வளவுதான். மற்றபடி ஆஞ்சநேய ஸ்வாமி எந்த திசையை நோக்கி வீற்றிருந்தாலும் அவரை வணங்கலாம். அனுமனை வணங்குவதால் மனோபலமும், உடல்பலமும், புத்திபலமும் கூடும். மனம், வாக்கு, காயம் அதாவது சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒருமித்து செயல்பட, அனுமன் வழிபாடு என்பது துணை நிற்கும்.

?லட்சுமி கடாட்சம் என்பது பணத்தை மட்டும் குறிக்குமா?
– அ.யாழினிபர்வதம், சென்னை.
நிச்சயமாக இல்லை. தனலட்சுமி, தான்ய லட்சுமி, வித்யா லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, தைர்ய லட்சுமி, சந்தான லட்சுமி, சௌபாக்ய லட்சுமி என்று அஷ்டலட்சுமிகளைக் குறிப்பிடுகிறார்கள். இதில் முக்கியமாக வித்யா லட்சுமி எனும் கல்வியறிவும், தைர்ய லட்சுமி எனும் மனோதிடமும் இருந்தால், மற்ற லட்சுமிகள் அனைவரும் நம்மை விட்டு அகலமாட்டார்கள். இவற்றோடு முக்கியமாக ஆரோக்யலட்சுமி என்பவரும் இணைந்தால்தான் நிம்மதியான வாழ்வினைப் பெற முடியும். ஆக, எவர் ஒருவர் மன நிம்மதியுடனும் மனமகிழ்ச்சியுடனும் தேக ஆரோக்யத்துடனும் வாழ்கிறாரோ, அவரே முழுமையாக லட்சுமி கடாட்சம் பெற்றவர் ஆவார்.

?ஆண், பெண் மறுபிறப்பிலும் அதே மாதிரி பிறப்பார்களா?
– முருகன், விருதாசலம்.
இல்லை. மறுபிறவி என்பது இப்படித்தான் அமையும் என்று யாராலும் தீர்மானிக்க இயலாது. அவரவர் செய்யும் பாவ புண்ணியத்திற்கு ஏற்றவாறுதான் மறு பிறவி என்பதும் அமைகிறது. இதைத்தான் நம்முடைய தர்மசாஸ்திரம் எடுத்துச் சொல்கிறது. இவர் மீண்டும் ஆணாகத்தான் பிறப்பார் என்றோ, பெண்ணாகத்தான் பிறப்பார் என்றோ வரையறுக்க முடியாது. மீண்டும் மனிதப் பிறவிதான் கிடைக்கும் என்பதையே வரையறுக்க இயலாது. இவை அனைத்தையும் நாம் இந்தப் பிறவியில் செய்யும் செயல்கள்தான் தீர்மானிக்கும்.

Related Stories: