தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம், மறியல்: சென்னையில் முன்னாள் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா கைது

 

சென்னை: போதை பொருள் பயன்படுத்திய தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று போராட்டம், மறியல் நடைபெற்றது. சென்னையில் முன்னாள் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராக இருப்பவர் சரத்குமார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி காண சென்றார். அவர் கிரிக்கெட் மைதானத்துக்குள் இருந்தே போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்தன. போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவித்தாகக் கூறி, அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது. அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஜூன் 29ம் தேதி (நேற்று) போராட்டம் நடத்துவதாக அறிவித்தது. அதன்படி நேற்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த தயாராகி வந்தனர்.

இந்நிலையில் திடீரென போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருந்த போதிலும் அறிவித்தவாறு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் ஆர்ப்பாட்டத்திற்கான மேடை அமைக்கும் பணியில் திமுகவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி பெறாததால் மேடை அமைக்க அனுமதிக்க முடியாது. பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முன்னதாக அனுமதி பெற வேண்டும். போராட்டத்திற்கு மாநகர காவல் ஆணையரிடம் முன்அனுமதி பெற வேண்டும் எனவும் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து ஒலிபெருக்கி உள்ளிட்ட பொருட்களை போலீசார் அகற்ற தொடங்கினர். இதற்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து திமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் சென்னை எழும்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதேபோல சென்னை புரசைவாக்கம் டவுட்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாணவர் அணி செயலாளர் வீரமணி ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழன் பிரசன்னா உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, தவெக அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தவெக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களில் போலீசார் காலை முதல் இரவு வரை 690 பேரின் பெயர் மற்றும் முகவரிகளை மட்டுமே எழுத முடிந்தது. அதில் 234 பேர் பெண்கள். இரவு 7.15 மணிக்கு அனைவரையும் விடுதலை செய்வதாக போலீசார் அறிவித்து விட்டனர்.

மேலும் சென்னை சைதாப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் எம்எல்ஏக்கள் தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், காரப்பாக்கம் கணபதி, பிரபாகர ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தவெக அரசின் சாயம் வெளுத்து போச்சு, போதை என்பது மாத்திரையா, கொக்கைன் என்ன சாக்லேட்டா என்பது போன்ற கண்டன முழக்கங்களை எழுப்பி கோஷமிட்டனர். அப்போது அவர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதே போல சென்னை சிந்தாரிப்பேட்டையில் மாவட்ட செயலாளர் மயிலை த.வேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பகுதி செயலாளர்கள் ஏழுமலை, கோசுமணி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜா அன்பழகன், சுற்றுச்சூழல் மாவட்ட துணை அமைப்பாளர் தி.நகர் லயன் பி.சக்திவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது தவெக அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோஷம் எழுப்பப்பட்டது.

இதே போல திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கோவை, ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்பட தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அமைச்சர் சரத்குமார் பதவி விலகி கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கேயும் அமைச்சர் சரத்குமார் வீடியோவில் செய்தது போலவே செய்து காட்டி நூதன முறையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்

திமுக மாணவரணி வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தி அதனை ரீல்ஸ் ஆக வெளியிட்ட அமைச்சர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்காத தவெக அரசை கண்டித்தும், அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் திமுக மாணவரணியின் சார்பில் தமிழ்நாடு முழுக்க நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல இடங்களிலும் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் தடையை தகர்த்து எழுச்சியாக போராட்டம் நடைபெற்று முடிந்தது.

திமுக சார்பில் நடந்த இன்றைய போராட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான உடன்பிறப்புகள் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருளை பயன்படுத்திய அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என மாணவரணியினர் தெரிவித்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* இது வெறும் டிரைலர் தான் சிரித்த முகத்துடன் சிறைச்செல்ல தயார்: சேகர்பாபு பேட்டி

ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பேட்டி: அமைச்சர் கில்லி சரத், கிரிக்கெட் மைதானத்தில் போதை மாத்திரையை பொடியாக்கி அதை நுகர முயன்றதை தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இதுகுறித்து அரசு கவனத்தை ஈர்க்கவும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவும் திமுக மாணவர் அணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. சென்னையில் திமுக சார்பில் ஒரே இடத்தில் எழும்பூரில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம்.

இதுகுறித்து முறையாக மனு அளிக்கப்பட்டது. ஆனால் அங்கே போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவா திமுக போராட்ட களத்தில் ஈடுபட்டு வருகிறது. நியாயமான கோரிக்கைகளை வற்புறுத்த, கேளா காதுகளாக இருக்கும் அரசாங்கத்தின் செவிகளுக்கு சென்று சேர்வதற்கு கவனத்தை ஈர்ப்பதற்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது வெறும் டிரைலர் தான். ஒரு இடத்தில் நடைபெற இருந்த போராட்டத்தை மூன்று இடங்களுக்கு மாற்றப்பட்டு போராட்டம் நடந்தது. இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கையில் ஈடுபடுவது எங்கள் இயக்கத்திற்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும்.

அடிக்க அடிக்க எழும் பந்தாக, அறுக்க அறுக்க மணக்கும் சந்தனமாக, தீட்ட தீட்ட ஜொலிக்கும் வைரமாக திமுக இருக்கும். நெருக்கடியையே சிரித்த முகத்துடன் 24 வயதில் சந்தித்தவர் எங்கள் தலைவர் மு.கஸ்டாலின். அவரது படை சிறைக்கு அஞ்சாது. கொடும் சிறைச்சாலை என்றாலும் சரி அல்லது காவல்துறையின் தடியடி பிரயோகமாக இருந்தாலும் சரி சிரித்த முகத்துடன் சிறைச்செல்ல தயார். தமிழக அரசு எங்களை எப்படி அணுகுகிறதோ அதேபோலான அணுகுமுறைதான் எங்களிடமும் இருக்கும். இந்தப் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: