தேர்தலில் மக்கள் மிகப்பெரிய ஊழல்: அமைச்சர் பேச்சால் சர்ச்சை

 

பவானி: தமிழக சட்டமன்ற தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டதுதான் மக்கள் செய்த மிகப்பெரிய ஊழல் என அமைச்சர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் பவானியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது.

இக்கூட்டத்தில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பேசியதாவது: கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் பலர் ஊழல் செய்வதை பார்த்திருப்பீர்கள். ஆனால், தற்போது நடந்து முடிந்த 2026 பொதுத்தேர்தலில் மக்களாகிய நீங்கள் செய்தது தான் பெரும் ஊழல். ஆம், வாங்க வேண்டிய இடத்துல வாங்கிக்கொண்டு, குத்த வேண்டிய இடத்துல குத்திவிட்டீர்கள், எங்களை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்துவிட்டீர்கள். பணம் வாங்கிக்கொண்டு வேறு கட்சிக்கு ஓட்டு போட்டதுதான் மிகப்பெரிய ஊழல்.

பணம் இருப்பவர்கள் மட்டுமே அரசியலில் ஜெயிக்க முடியும் என கூறுவார்கள். ஆனால், இம்முறை நடந்த தேர்தல் அந்த சவாலை முறியடித்து விட்டது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் எனில் அவர்களின் சக்திக்கு ஏற்றபடி சுமார் ரூ.50 கோடி வரை செலவு செய்ய வேண்டும் என்பார்கள். ஆனால், நாங்கள் வெறும் 5 லட்சம் ரூபாய்கூட செலவு செய்யாமல் எம்எல்ஏ ஆகி விட்டோம். இந்த தேர்தல், வேற லெவல். இவ்வாறு அமைச்சர் விஜய் பாலாஜி பேசினார். பொது மேடையில், மக்களை, ஊழல்வாதிகள் என குற்றம்சாட்டி அமைச்சர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

* 5 மணி நேரம் தாமதம்

விழாவிற்காக பவானி நகராட்சி, குருப்பநாயக்கன்பாளையம், தொட்டிபாளையம், ஆண்டிகுளம் உள்பட 9 ஊராட்சிகளை சேர்ந்த ஆண், பெண் தூய்மை பணியாளர்கள் மாலை 4 மணிக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால், அமைச்சர் இரவு 9 மணி அளவில் வந்தபிறகு வேட்டி-சட்டை, புடவை மற்றும் உணவு வழங்கப்பட்டது. அமைச்சர் 5 மணி நேரம் தாமதமாக வந்ததால் தூய்மை பணியாளர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

Related Stories: