துப்புத் துலங்காத வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு: மாவட்டம்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை பரிந்துரை

 

மதுரை: துப்பு துலங்காத வழக்குகளை மறு விசாரணை செய்ய மாவட்டம்தோறும் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டுமென ஐகோர்ட் மதுரை கிளை பரிந்துரைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த மகேஸ்வரி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது வீட்டில் 9 சவரன் தங்க நகைகள் திருட்டுப் போனது தொடர்பாக 2020ம் ஆண்டு பழநி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. நீண்ட நாட்களாகியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால், இந்த வழக்கை துப்பு துலங்கவில்லை என காவல்துறை மூடியது. எனக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, ‘‘காவல்துறை வழக்குப்பதிவு செய்வதோடு தனது பொறுப்பை முடித்துக் கொள்ள முடியாது. ஒரு வழக்கில் முறையான விசாரணை நடத்தாமல், பல ஆண்டுகளாக துப்புத் துலக்கப்படாமல் கைவிரிப்பது அடிப்படை உரிமையை மீறுவதாகும். மனுதாரரின் திருட்டுப் போன சொத்தின் மதிப்பில் 30 சதவீத தொகையை, தமிழ்நாடு அரசின் உள்துறை அமைச்சகம் 12 வாரங்களுக்குள் இழப்பீடாக வழங்க வேண்டும்.

5 ஆண்டுகளுக்கும் மேலாக துப்பு துலங்காமல் இருக்கும் வழக்குகளை மறு விசாரணை செய்ய, ஒவ்வொரு மாவட்டத்திலும் திறமையான அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அமைக்க பரீசிலிக்க வேண்டும். இந்தக் குழுவிற்கு கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள், கூடுதல் அதிகாரங்கள் மற்றும் கூடுதல் ஊதியம், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் அதிகாரிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசு சிறப்பு வெகுமதிகளை வழங்க பரிசீலிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.

 

Related Stories: