வருமானத்துக்கு அதிகமாக ரூ.50 கோடி சொத்து குவித்த பெண் தாசில்தார்

*வீட்டில் ரூ.12 லட்சம் ரொக்கம் சிக்கியது

*வங்கியில் ரூ.38 லட்சம், ரூ.1.20 கோடி தங்கம் பறிமுதல்

திருமலை : தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஷமிர்பேட் தாசில்தாராக சுசரிதா பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 26ம் தேதி, ஒரு கோப்பு அனுமதி தொடர்பாக ஏக்கருக்கு ரூ.1 லட்சம் மற்றும் 30 ஏக்கருக்கு ரூ.30 லட்சம் என லஞ்சம் கேட்டாராம். இதற்கு ரூ.2 லட்சத்தை முன்பணமாகப் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சுசரிதாவின் சட்டவிரோத வருமானம் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதில் வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து நேற்றுமுன்தினம் தாசில்தார் வீடு, அலுவலகம் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

இதில் சுசரிதா கழுத்தில் அணிந்திருந்தது 11.94 காரட் வைர நகைகளின் மதிப்பு சுமார் ரூ.15 லட்சமாக இருக்கலாம் என்றும், சித்திப்பேட் மாவட்டம், தமரகுண்டாவில் உள்ள 2.17 ஏக்கர் விவசாய நிலம், ஐதராபாத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் உள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கீசரா, கானாமேட்டில் உள்ள இரண்டு வீட்டு மனைகள் ஆகியவை சுசரிதாவுக்குச் சொந்தமானவை என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

சுசரிதாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது ரூ.12 லட்சம் ரொக்கம், வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.38 லட்சம் இருப்பு, 2 கார்கள் மற்றும் ரூ.1.20 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளைப் பறிமுதல் செய்தனர். சுசரிதாவின் சொத்துக்களின் மதிப்பு ரூ.5,05,52,465 ஆகும்.

இது பதிவு விலையின் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் அதன் உண்மையான சந்தை மதிப்பு ரூ.50 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுசரிதா தொடர்பான சொத்துக்கள் குறித்த விசாரணை தொடரும் என லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை இயக்குநர் சாருசின்ஹா தெரிவித்துள்ளார். இதற்கிடையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் சுசரிதா சிக்கியதிலிருந்து மாவட்ட வருவாய் அதிகாரிகளின் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.

பல தாசில்தார்கள் விடுமுறைக்குச் சென்றுள்ள நிலையில், சிலர் அலுவலகங்களுக்கு வருவதைத் தவிர்த்து வருகின்றனர். ஒரு தாசில்தார் திடீரெனத் தனது அலுவலகத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

Related Stories: