உசிலம்பட்டி : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கண்ணன் தியேட்டர் பகுதியில் வசித்து வருபவர் பால்பாண்டி (26). இவரும் உசிலம்பட்டி நகராட்சி துணை தலைவரும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான தேன்மொழி சுந்தரமூர்த்தியின் மகன் கவிக்குமார் (23), கேசவன் (23), கிஷோர் (33) ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். நேற்று முன்தினம் மதுகுடிப்பதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கவிக்குமார், கேசவன், கிஷோர் ஆகியோர் பால்பாண்டியை உசிலம்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று மது வாங்கிக் கொடுத்துள்ளனர். அதிக போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்த பால்பாண்டி தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு மூன்று பேரும் தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கவிக்குமார், கேசவன், கிஷோர் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
