பட்டுக்கோட்டை அருகே வாய்த்தகராறில் கணவன்-மனைவி இருவரும் தாக்கிகொண்டதில் மனைவி பலி

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே தொழிலுக்கு சென்ற இடத்தில் கணவன், மனைவிக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இருவரும் தாக்கிக்கொண்டதில் மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணவன் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஆதிதெருவை சேர்ந்தவர் நாகராஜ் (39). இவரது மனைவி சத்யா ( 36). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இருவரும் பட்டுக்கோட்டையில் கல்லுப்பட்டறை மற்றும் பழைய இரும்பு சாமான் வாங்கி விற்கும் வேலை செய்து வருகின்றனர். கணவன், மனைவி இருவருமே ஒரு டாட்டா ஏஸ் வாகனத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்துவந்து விற்பனை செய்துவந்த நிலையில் நேற்று இரவு தொழிலுக்காக ஏனாதி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் அருகே செல்லும்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இருவருமே கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் மனைவி சத்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணவன் நாகராஜ் மிகவும் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த வாட்டாத்திக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: