தெப்பக்காடு அருகே பரபரப்பு ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்; ஆக்ரோஷத்துடன் விரட்டிய காட்டு யானை

*சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்

ஊட்டி : முதுமலை புலிகள் காப்பத்தி்ற்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதியில் ஆபத்தை உணராமல் யானைக்கு அருகே காரை நிறுத்தி இறங்கி சென்று சுற்றுலா பயணிகள் அத்துமீறிய நிலையில் அவர்களை யானை கோபத்துடன் விரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு புலி, காட்டு யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வருகின்றனர்.

மசினகுடி, முதுமலை, தெப்பக்காடு, கூடலூர் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளில் சிலர் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் அருகில் நின்று புகைப்படங்கள் எடுப்பது மற்றும் அவற்றை எரிச்சலூட்டும் வகையில் நடந்துகொள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆபத்தை உணராமல் சில சுற்றுலா பயணிகள் அத்துமீறலில் ஈடுபடுவதால் வன விலங்குகள் ஆக்ரோஷமாக மாறுவதோடு அது பயணிகளின் உயிருக்கே அச்சுறுத்தலாக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது வனப்பகுதி பசுமையாக காணப்படுவதால் சாலையோரங்களிலேயே வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

நேற்று முன்தினம் தெப்பக்காடு சாலையில் காட்டு யானைகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தன. அதன் அருகில் வாகனத்தை நிறுத்திய சுற்றுலா பயணிகள் காரில் இருந்து கிழே இறங்கி புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.

அப்போது கோபமடைந்த யானை ஒன்று அவர்களை விரட்டியது. அச்சமடைந்த அவர்கள் அலறியடித்து கொண்டு அங்கிருந்து காரை வேகமாக எடுத்துச்சென்று உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘புலிகள் காப்பகமாக பராமரிக்கப்பட்டு வரும் முதுமலையில் புலி, யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

சில நேரங்களில் சாலையைக் கடக்கும் அல்லது சாலையோரங்களில் தென்படும். வாகனத்தில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற தைரியத்தில் வன விலங்குகளின் அருகில் நின்று செல்பி, வீடியோ, போட்டோக்களை எடுக்கின்றனர்.வன விலங்குகள் முன் கூச்சலிட்டு தொந்தரவு செய்கின்றனர்.

இதனால் யானை போன்ற வன விலங்குகள் ஆக்ரோஷமாக மாறி வாகனங்களைத் தாக்க ஆரம்பிக்கின்றன. இன்னும் சிலர் வாகனத்தை நிறுத்திவிட்டு வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.

இது அவர்களுக்கே ஆபத்தாக முடியும்.தடையை மீறி தின்பண்டங்களை வன விலங்குகளுக்கு வீசிச் செல்வதால் அவற்றுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகளை கண்காணித்து உரிய அபராதம் விதிக்க வேண்டும். சாலையோரங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி தடுக்க வேண்டும். தொடர்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்’’ என்றனர்.

Related Stories: