சென்னை: கர்நாடக பின்னணியை கொண்ட ஒருவரை தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது, “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது” போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக வெங்கடநாராயணா நியமிக்கப்பட்டிருப்பதை கடுமையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் அங்குள்ள நீர்வளத்துறை அமைச்சர், “எங்கள் மாநில எல்லைக்குள் மேகதாது அணையை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது” என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக தமிழ்நாடு- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் பிரச்னை நீடித்து வரும் நிலையில், மேகதாது அணை தொடர்பாகவும் தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றமும், காவேரி மேலாண்மை தொடர்பான அமைப்புகளும் இந்த விவகாரத்தில் சட்ட மற்றும் நிர்வாக வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நிலையிலும், கர்நாடக அரசு, அணை கட்டும் முயற்சியில் உறுதியாக இருப்பதாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது. இத்தகைய சூழலில், கர்நாடக பின்னணியை கொண்ட ஒருவரை தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
இது, “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது” போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த தகுதியான நபர்கள் பலர் இருக்கையில், ஏன் இந்த நியமனம் என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். எனவே, தமிழக அரசு இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்து, வெங்கடநாராயணா நியமனத்தை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
