சென்னை: சென்னையில் வைகோ தலைமையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப. செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் கேட்ட போது, அவர் கட்சியின் உயர்நிலைக் குழுவில் உறுப்பினராக இல்லாததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று மதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் இதறலு மறுப்பு தெரிவித்துள்ள எம்எல்ஏ செந்தில் செல்வன், “நான் ஏற்கனவே மதிமுகவிலிருந்து விலகி தற்போது திமுக உறுப்பினராக உள்ளேன்”. ஏற்கனவே முழுமையாக திமுக-வில் இணைந்து விட்டதால் மதிமுக கூட்டத்தில் பங்கேற்கத் தேவையில்லை என விளக்கம் கொடுத்து உள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதிமுக தலைமை திமுக கூட்டணியில் இருந்து விலகி, ஆளுக்கு கட்சியாக உள்ள தவெக-விற்கு ஆதரவளிக்க திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டு வென்றனர். கூட்டணி மாற திட்டமிட்டு வருவதால் தங்கள் கட்சி வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றி பெற்ற 2 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என மதிமுக தலைமை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
பதவி விலகும் முடிவை ஏற்க மறுத்த சீர்காழி எம்.எல்.ஏ, இன்றைய மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்ததோடு, தான் எப்போதோ திமுக-வில் இணைந்து விட்டதாக கூறி மதிமுக-விற்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
