திருத்தணி: திருவாலங்காடு-அரக்கோணம் 4 வழி சாலையில் சென்டர் மீடியனில் நடப்பட்டுள்ள பூச்செடிகள் தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிக்காததால் செடிகள் கருகி வருவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
திருவாலங்காடு-அரக்கோணம் 2 வழி மாநில நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்து திருவாலங்காடு முதல் அரக்கோணம் நகராட்சி எல்லை வரை 9 கி.மீ நீளத்திற்கு 4 வழி சாலையாக மேம்படுத்தப்பட்டது. பின்னர், சாலைக்கு இருபுறமும் நிழல் தரும் வகையில் 1500 மரக்கன்றுகள் நடப்பட்டு கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
திருத்தணி உப கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் அகலப்படுத்தப்பட்ட இந்த சாலையின் நடுவே சென்டர் மீடியனில் அலங்கார செடிகள் நடப்பட்டு, தினமும் தண்ணீர் பாய்ச்சி முறையாக பராமரிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சென்டர் மீடியனில் உள்ள செடிகள் உரிய பராமரிப்பின்றி கைவிடப்பட்டதால் பெரும்பாலான செடிகள் காய்ந்து, ஆடு மாடுகளின் மேய்ச்சலுக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக சென்டர் மீடியனில் நடப்பட்ட செவ்வரளி உள்ளிட்ட அலங்கார செடிகள் உரிய பராமரிப்பின்றி கோடை வெயிலில் கருகியுள்ளது. எனவே, பயணிகளை கவரும் வகையில் ரம்மியமாக பூத்து குலுங்குவதற்காக நடப்பட்ட இந்த செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி முறையாக பராமரிக்க நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
