×

முடிவுக்கு வந்தது தந்தை-மகன் மோதல் அன்புமணியை கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்திய ராமதாஸ்: இனி எல்லாம் நல்லதே நடக்கும் என பேட்டி

திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி இடையே கட்சியை கைப்பற்றுவதில் கடும் மோதல் ஏற்பட்டது. அன்புமணியை தனிப்பட்ட முறையில் ராமதாஸ் கடுமையாக சாடினார். ஒரு கட்டத்தில் அன்புமணி தலைமை பண்பு இல்லாதவர், அவரை அரசியலுக்கு அழைத்து வந்து தவறு செய்துவிட்டேன். எனவே எனது பெயரை இனிமேல் பயன்படுத்தக்கூடாது என ராமதாஸ் தெரிவித்தார்.

மேலும், நான் பார்த்து, பார்த்து வளர்த்த கட்சியை அன்புமணி அபகரித்து கொண்டதாக கூறியதோடு, கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்தனி அணிகளாக பாமக செயல்பட்டது. மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை மாறி, மாறி இருவரும் நீக்கி கொண்டனர். இரு தரப்பிலும் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இது கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் கட்சியில் முடிவெடுக்கும் உரிமை, கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்தும் இரு தரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போதும் நிலுவையில் உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக ராமதாஸ் போட்டி வேட்பாளர்களை களமிறக்கும் அளவுக்கு ராமதாஸ், அன்புமணி மோதல் முற்றியது. இந்தளவுக்கு சென்றுவிட்ட பிறகு இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்பது போல பாமகவினர் கூறி வந்தனர். இருப்பினும் ராமதாஸ் வெளியூர் சென்றிருக்கும் நேரத்தில் தாயார் சரஸ்வதியை மட்டும் அவ்வப்போது அன்புமணி சந்தித்து பேசி வந்தார். இது போன்ற சூழலில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக 4 இடங்களில் வெற்றிப்பெற்றது.

இந்நிலையில், ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதலை தீர்க்கவும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், இருவரிடம் சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர். இந்த சூழலில், நேற்று ராமதாஸ்-சரவஸ்வதிக்கு திருமண நாள். இதனால், அன்புமணி, தனது மனைவி, மகள்கள் மற்றும் பேர குழந்தைகளுடன் தைலாபுரம் தோட்டத்து வந்தார். அவருக்கு ஆர்த்தி எடுத்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.

ராமதாசை நேரில் சந்தித்து அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்தார். அன்புமணியை பார்த்ததும், ராமதாஸ் அவரை கட்டிப்பிடித்து ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இதன் மூலம் அப்பா-மகன் இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இருவரின் கண்ணீரை கண்டதும், சவுமியா, அவரது மகள் உள்ளிட்ட அனைவரும் கண்ணீர் மல்கினர்.

பின்னர் அன்புமணியும், சவுமியாவும் ராமதாஸ், சரஸ்வதி ஆகியோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். பின்னர் பேரன், பேத்திகள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மனம் விட்டு பேசியபோது, கருத்து வேறுபாடுகள் சரி செய்யப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து, சைவ, அசைவ உணவுகள் விருந்து பரிமாறப்பட்டது. இதனை தொடர்ந்து வெளியே வந்த அன்புமணியிடம் கேட்டபோது, ‘‘இன்று அப்பா, அம்மாவுடைய திருமணமான நாளையொட்டி குடும்பத்தினருடன் அவர்களை சந்தித்து வாழ்த்து கூறி, ஆசி பெற்றோம். இனி எல்லாம் நல்லதே நடக்கும்’’ என்றார்.

Tags : Ramadas ,Dindivanam ,Bhamaka ,Anbumani ,
× RELATED கிரெடிட் கார்டு மோசடிகள் இழந்த பணத்தை...