இளைய தலைமுறை தொழில் முனைவோரின் கனவிற்கு வழிகாட்ட ‘ஸ்டார்ட்அப் தமிழா’ ரியாலிட்டி ஷோ: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: இளைய தலைமுறையின் தொழில் முனைவோர் கனவிற்கு வழிகாட்ட ‘ஸ்டார்ட் அப் தமிழா’ என்ற ரியாலிட்டி ஷோவை நடத்த தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்ககம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாட்டினை புத்தொழில் நிறுவனங்களுக்கேற்ற சூழமைவு கொண்ட உலகின் சிறந்த இடங்களில் ஒன்றாக உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன், தொலைநோக்கு பார்வையோடு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு புத்தொழில் தற்போது ‘ஸ்டார்ட்அப் தமிழா’ என்ற நிகழ்ச்சியினை ஒருங்கிணைக்க உள்ளது. ‘ஸ்டார்ட்அப் தமிழா’ என்பது ஒரு தனித்துவமான தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி.

இளைய தலைமுறையினர் பலருக்கும், தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், போதிய விழிப்புணர்வு இல்லாதது, வழிக்காட்டுதல்கள், முதலீடு பெறுவதில் சிரமம் என பல தடைகள் உள்ளன. எனவே, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வழியாக இளைஞர்களுக்கு புத்தாக்க கண்டுபிடிப்பு, புத்தொழில், முதலீடு திரட்டுதல் குறித்த விழிப்புணர்வினை வழங்குவதுடன், உலகளாவிய முதலீட்டாளர்களிடையே தமிழ்நாட்டு புத்தொழில் நிறுவனங்களை முறையாக அறிமுகம் செய்வதன் மூலம், அந்நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான முதலீடுகளை பெற ஆதரவு அளிப்பதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

மக்களை எளிதில் சென்றடைய பயன்படும் ஊடகமாக உள்ள தொலைக்காட்சி வழியே, புத்தொழில் முனைவோர்களையும், முதலீட்டாளர்களையும் இணைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘ஸ்டார்ட்அப் தமிழா’ ரியாலிட்டி நிகழ்ச்சியானது மாநிலத்தில் புத்தொழில் முதலீட்டு கலாசாரத்தினை மேம்படுத்த பெரிதும் உதவும். இந்த முயற்சி புத்தொழில் நிறுவனங்களுக்கு முதலீடுகளை ஈர்க்க உதவுவதுடன், முதலீட்டாளர்களுக்கும் நவீன முதலீட்டு வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விண்ணப்பிப்பது குறித்த விபரங்கள் விரைவில் தமிழ்நாடு புத்தொழில் இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இளைய தலைமுறை தொழில் முனைவோரின் கனவிற்கு வழிகாட்ட ‘ஸ்டார்ட்அப் தமிழா’ ரியாலிட்டி ஷோ: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: