×

சிறு வயதிலேயே உடல் பருமன் மற்றும் இதய நோய் அதிகரிப்பு: உடற்பயிற்சி விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க தவறும் இளைய தலைமுறை:மருத்துவர்கள் எச்சரிக்கை

முந்தைய காலங்களில் மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டு இருந்தனர். குறிப்பாக, பள்ளியில் மாணவர்களுக்கு தினசரி விளையாட்டு நேரம் என ஒன்று இருந்தபோதும், பள்ளி முடிந்து வீடு திரும்பினால், அக்கம் பக்கத்து சிறுவர்கள், நண்பர்களுடன் இணைந்து பல்வேறு விளையாட்டுகளை விளையாடி பொதுதை கழித்தனர். இதன்மூலம் அவர்களது உடல், மனது இரண்டும் ஆரோக்கியமாக இருந்தது.

இன்றைய சூழலில், ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளார்கள் என்றால், அதில் குறைந்தபட்சம் 5 மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவதே பெரிய விஷயமாக உள்ளது. மாணவர்கள், காலை எழுந்தவுடன் வேக வேகமாக பள்ளிக்கு கிளம்பி செல்கின்றனர். அங்கு 6 முதல் 8 மணி நேரம் வகுப்பறையில் அமர்ந்து பாடங்களை கற்கின்றனர். வாரத்தில் 2 பீரியட் மட்டுமே பி.டி எனப்படும் உடற்பயிற்சி வகுப்புகள் பள்ளியில் உள்ளன.

இந்த நேரத்தில், மைதானம் உள்ள பள்ளிகளில் மாணவர்களை விளையாட அனுமதிக்கின்றனர். மைதானம் இல்லாத பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்பு என்கின்ற ஒன்றே இல்லை. ஒரு சில பள்ளிகளில் உள்ள இந்த உடற்பயிற்சி வகுப்பிலும் மாணவர்கள் சென்று விளையாடாமல் குழு குழுவாக அமர்ந்து பேசுவதை நாம் பார்த்திருப்போம். மேலும் பல பள்ளிகளில் குறிப்பிட்ட பாடங்களை முடிக்கவில்லை என்றால் உடற்பயிற்சி வகுப்பை கடன் வாங்கி அந்த நேரத்தில் மற்ற பாடங்களை எடுக்கும் வினோதங்களையும் நாம் பார்த்து வருகிறோம்.

படிப்பிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், மாணவர்களின் உடல் நலனில் சம்பந்தப்பட்ட விளையாட்டிற்கு பலரும் கொடுப்பதில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். மாணவர்களின் பள்ளிப் பருவம் என்பது ஒரு மரத்திற்கு ஆணிவேர் எப்படி முக்கியமோ அது போன்றது. ஒரு குழந்தை பிறந்து 4 வயதில் இருந்து கிட்டத்தட்ட 16 வயது வரை தனது வாழ்நாளில் முக்கிய காலகட்டத்தை அந்த குழந்தை பள்ளி வளாகத்தில் கடக்கிறது.

ஆனால், அந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு படிப்பை மட்டுமே பெரும்பாலான பள்ளிகள் போதிக்கின்றன. விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள குழந்தைகள் மட்டுமே மைதானத்திற்கு சென்று விளையாடுகின்றனர். ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் 5 அல்லது 10 மாணவர்கள் மட்டுமே விளையாட்டில் சிறந்து விளங்குகின்றனர். அவர்கள் மட்டுமே பள்ளி முடிந்ததும், மைதானத்திற்கு சென்று 2 மணி நேரம் விளையாடிவிட்டு அதன் பிறகு வீட்டுக்கு செல்கின்றனர்.

மற்றவர்கள் எல்லாம் பள்ளி முடிந்தவுடன் நேரடியாக வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் பெரும்பாலானவர்கள் வீட்டு படம் செய்யவும், சிலர் டியூஷனுக்கும் சென்று விடுகின்றனர். இவ்வாறு ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையாக முதல் 16 வருடங்கள் மாணவர்களுக்கு சென்று விடுகின்றன. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வரை, மாணவர்கள் ஓடி ஆடி விளையாடுவதை நாம் பார்த்திருப்போம். தற்போது அந்த பழக்க வழக்கங்கள் தற்போது மிகவும் குறைந்து விட்டன.

அதுவும் சென்னை போன்ற பெரு நகரங்களில் மாணவர்கள் கும்பலாக சேர்ந்து விளையாடுவதை நாம் பார்ப்பது அரிது. அதுவும் செல்போன் பயன்பாடு வந்த பின்பு கிடைக்கும் நேரத்தை மாணவ மாணவிகள் அதிக நேரங்களை செல்போனில் கழித்து வருகின்றனர். இதனால் விளையாடுவதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை என்றே கூறலாம். இதனால் சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. முந்தைய காலங்களில் விளையாட நேரம் இருந்தது. அதே நேரத்தில் உணவு மற்றும் நொறுக்கு தீனிகள் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது.

தற்போது பேக்கரி உணவுகள், சிப்ஸ், மசாலா, சீஸ் போன்ற உணவு வகைகளை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். பெரும்பாலானோர் உடற்பயிற்சியும் செய்வதில்லை. இதன் காரணமாக, பல்வேறு நோய்களுக்கு சிறு வயதிலேயே குழந்தைகள் ஆளாகின்றனர். குறிப்பாக உடல் பருமன் பிரச்னை தற்போது குழந்தைகளை ஆட்டி படைத்து வருகிறது. 10 வயது குழந்தைக்கு சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என டயாலிசிஸ் நடக்கிறது. 15 வயது குழந்தைகளுக்கு உடலின் சர்க்கரை அளவு அதிகரித்து வட்டது என கூறி, இன்சுலின் எடுத்துக் கொள்ளும் சூழ்நிலை வருகிறது.

12 வயது சிறுவன் சாலையில் செல்லும் போது சுருண்டு விழுந்து மரணம் அடைகிறான் காரணம் ஸ்டோக் எனக் கூறுகிறார்கள். இவையெல்லாம் எப்படி வருகிறது, இதற்கு என்ன காரணம் என்பது குறித்து பெரிய அளவில் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அனைத்திற்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இல்லை, உணவு முறையில் மாற்றம், உடற்பயிற்சி செய்யாதது என மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்பட்டால், குழந்தைகளின் வருங்காலத்திற்கு நல்லது. இல்லையென்றால் 16 வயதில் 12ம் வகுப்பு முடித்து வெளியே வரும் பெரும்பாலான குழந்தைகள் நோயாளிகளாக மாறும் வாய்ப்பு உள்ளது. இன்றைய சூழலில் உணவு பழக்க வழக்கம், சுகாதாரமிண்மை, காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை நாம் எதிர் கொண்டு இருக்கிறோம். இவைகளை சமாளிக்க வேண்டும் என்றால் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். முன்பெல்லாம் வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் பள்ளிகள் இருக்கும்.

மாணவர்கள் பலர் நடந்து அல்லது சைக்கிளில் செல்வார்கள் இதுவே அவர்களுக்கு ஒரு உடற்பயிற்சியாக இருந்தது. தற்போது அந்த நிலை மாறி, பெரும்பாலானோர் ஆட்டோ, கார், வேன்களில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். வீட்டிற்கு வந்ததும், புத்தக பையை தூக்கி வீசிவிட்டு செல்போனை எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விடுகின்றனர். தினசரி இந்த காட்சிகளை நம்மை சுற்றி இருக்கும் பெரும்பாலான வீடுகளில் பார்க்க முடியும்.

அந்த குழந்தையின் விளையாட்டு திறன் என்ன என்பதை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பெற்றோர்களும் குழந்தைகள் படிக்க வேண்டும், அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தும் அதே நேரத்தில் எனது குழந்தை நோய் இல்லாமல் இருக்க வேண்டும், நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். எனவே, செல்போனை வாங்கி வைத்து விட்டு, வெளியே சென்று விளையாடு எனக் கூற வேண்டும்.

வார விடுமுறை நாட்களில் வீட்டின் அருகில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்கு குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு விளையாட குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். பள்ளிகளில் உள்ள விளையாட்டுகளில் ஏதாவது ஒரு விளையாட்டில் ஒவ்வொரு குழந்தையையும் சேர்த்து விட வேண்டும். அப்போதுதான் வருங்கால இளைய தலைமுறை நோயின்றி வாழ முடியும்.
எந்த விளையாட்டு குழந்தைகளுக்கு பிடிக்கிறது.

எதில் அவர்கள் திறமையுடன் இருக்கிறார்கள் என்பதை சிறு வயதிலேயே பெற்றோர்கள் கண்டறிந்து அந்த விளையாட்டை குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். அப்போது அவர்களுக்கு அதில் சாதிக்க வாய்ப்பு கிடைக்கும். விளையாட்டில் சாதித்த ஒவ்வொரு குழந்தைகளுக்கு பின்னால் அவர்களது பெற்றோர்களின் அர்ப்பணிப்பு உள்ளது என்பதை தற்போதுள்ள பெற்றோர்கள் உற்று கவனிக்க வேண்டும். காலை 6 மணிக்கு ஒரு குழந்தை மைதானத்தில் இருக்க வேண்டும் என்றால் அவர்களது பெற்றோர்கள் 5 மணிக்கே எழுந்து அந்த குழந்தையை தயார் செய்து, அவரது தந்தை அந்த குழந்தையை மைதானத்தில் விட்டு விட்டு ஒரு மணி நேரம் காத்திருந்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து, பள்ளிக்கு அழைத்துச் செல்லும் செயல்களை நாம் பார்த்திருப்போம்.

கண்டிப்பாக அவ்வாறு பயிற்றுவிக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் விளையாட்டில் சாதிப்பார்கள். படிப்பு மற்றும் விளையாட்டு என 2 சான்றிதழ்களோடு அவர்கள் வெளியே செல்லும்போது அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது. எனவே படிப்பு மட்டுமே வாழ்க்கை என்ற தவறான கண்ணோட்டத்தை பெற்றோர்கள் மாற்றிக்கொண்டு படிப்புடன் கூடிய விளையாட்டை குழந்தைகளுக்கு கற்று தர வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். தங்களது குழந்தை ஒரு மருத்துவராக, ஒரு இன்ஜினியராக, ஒரு வழக்கறிஞராக ஆக வேண்டும் என பெற்றோர்கள் கனவு காண்கிறார்கள்.

அதில் தவறில்லை அதே நேரத்தில் அவர்கள் உடல்நிலை நல்ல நிலையில் இருந்தால் தான் இதனை அவர்களால் செய்ய முடியும் என பெற்றோர்கள் அறிய வேண்டும். இதை அவர்கள் மனதில் கொண்டால் வருங்கால இளைய தலைமுறை நோயின்றி வாழ வழிவகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து கொளத்தூரை சேர்ந்த மனநல ஆலோசகர் வனிதா கூறியதாவது:

பொதுவாக பெரும்பாலானவர்கள் விளையாட்டு என்பதை ஒரு போதுபோக்காக கருதுகின்றனர். அதற்கு பின்பு உள்ள உளவியல் காரணங்களை பெரும்பாலான பெற்றோர்கள் அறிவதில்லை. உதாரணமாக நம்முடைய கலாச்சாரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வீரம் விளைந்த மண். வேட்டை சமூகமாக இருந்தோம். அதன் பின்பு போர் புரிந்தோம். விவசாயம் செய்தோம். கடலில் மீன் பிடித்தோம். இதுபோன்ற செயல்களில் நம் ஈடுபட்டோம். இவை அனைத்தும் உடற்பயிற்சி.

அதன் பின்பு அறிவியல் வளர்ச்சி, சமூக வளர்ச்சி வளர வளர உடற்பயிற்சியில் இருந்து நாம் விலகி வந்து விட்டோம். பெரும்பாலானவர்கள் பூங்கா அல்லது கடற்கரையில் நடக்கும் போது வெறும் கால்களில் நடப்பதை நாம் பார்த்திருப்போம். நுண் நரம்புகளுக்கான தேவை நம்மிடம் இருந்து கொண்டே உள்ளது. இதனால் தான் அவர்கள் அவ்வாறு நடக்கின்றனர். ஆனால் இது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. குழந்தைகளின் விளையாட்டு நேரம் குறைந்து வருவதால் மனவளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

விளையாட்டில் சாதனை படைத்தவர்கள் அனைவரும் விளையாட்டை வாழ்க்கையாக பார்த்தார்கள். இதனால் அவர்களால் சாதிக்க முடிந்தது. ஆனால் பலர் வாழ்க்கையையே விளையாட்டாக பார்க்கின்றனர். அவர்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வருகின்றனர். ஒரு விளையாட்டுக்கு நாம் மரியாதை செலுத்தி அதனை விளையாடும் போது அது நம்மை மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு சென்று விடும். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தைகள் வீதிகளில் கில்லி, கபடி, பச்சை குதிரை, நொண்டி, ஓடிபிடித்து விளையாடுதல் போன்ற விளையாட்டுகளை விளையாடினார்கள்.

தற்போது அந்த வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்காத நிலையில் டிவி, செல்போன், தூக்கம் போன்றவற்றில் அவர்கள் நேரத்தை செலவிடுகின்றனர். இதனால், சிறுவயதிலேயே அவர்களுக்கு பல்வேறு நோய்கள் வருகின்றன. எனவே பெற்றோர்கள் குழந்தைகளை விளையாடு என கூறுவதை விட தாங்களும் களத்தில் இறங்கி அவர்களுடன் விளையாட செல்ல வேண்டும். சரியான உடற்பயிற்சி, சரியான உணவு மாணவர்களுக்கு கிடைக்கும் போது மனம் உடல் இரண்டுமே அவர்களுக்கு நன்கு பயிற்று வைக்கப்படுகிறது.

விளையாட்டு பல வாழ்வியல் நடைமுறைகளை குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறது. குறிப்பாக விளையாட்டில் குழந்தை தோல்வி அடையும் போது அதுக்கு குழந்தைகளுக்கு பல்வேறு படிப்பினைகளை கற்றுத் தருகிறது. தற்போதுள்ள மாணவர்களுக்கு பசி எடுக்கிறது ஆனால் எந்த உணவை சாப்பிட வேண்டும் என்பது தெரியவில்லை அதனால் உடலுக்கு ஒவ்வாத உணவுகளை அவர்கள் சாப்பிட வேண்டிய சூழ்நிலை வருகிறது.

இதுதான் சரியான உணவு என அவர்களுக்கு நல்ல உணவை நாம் கொடுத்து பழகி விட்டால் அவர்களது வாழ்க்கை மிக அழகாகிவிடும். நமது ஒவ்வொரு பண்டைய விளையாட்டு முறையிலும் ஒரு வாழ்வியல் தத்துவங்களை நமது முன்னோர்கள் விட்டு சென்றுள்ளனர். குறிப்பாக தாயம் விளையாடும் போது நாம் தாயத்துக்காக காத்திருக்க வேண்டும் வாழ்க்கையில் காத்திருப்பது என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அது சுட்டிக் கட்டுகிறது.

இதேபோன்று பல்லாங்குழி விளையாடும்போது திட்டமிடுதல் என்கின்ற ஒரு விஷயத்தை நமக்கு அது கற்றுக் கொடுக்கிறது. எனவே விளையாட்டு என்பதை நேர விரையமாக கருதாமல் மாணவர்களும் பெற்றோர்களும் அதனை ஒரு சாதனைக்கான நேரமாக கருத வேண்டும். அரசுப் பள்ளிகளில் தற்போது விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தனியார் பள்ளிகள் இதனைப் பின்பற்றி குழந்தைகளுக்கான விளையாட்டுக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* மைதானம் இல்லாத பள்ளிகள்
சில தனியார் பள்ளிகள் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லாமல் சிறிய வீடு போன்ற அமைப்புடைய கட்டிடங்களில் பள்ளிகளை நடத்துகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது எட்டாக்கனியாக உள்ளது. விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் தரக்கூடாது என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

* முதல்வரின் அறிவுரை
சமீபத்தில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள், இளைஞர்கள் இடையே உடல் பருமன் பிரச்னையை சுட்டிக்காட்டி, உடல் நலனில் மாணவ மாணவிகள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். படிப்பு எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டும் முக்கியம் எனக் கூறியிருந்தார். தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் உடல் நலத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

* பாகுபாடு கூடாது
பெரும்பாலான விளையாட்டுகளில் ஆண்களின் பங்கு அதிகமாக உள்ளது. பெண்களின் பங்கு குறைவாகவே உள்ளது. காலை மற்றும் மாலை வேலைகளில் ஆண் குழந்தைகளை தைரியமாக பெற்றோர் விளையாட்டு பயிற்சிக்காக அனுப்பி வைக்கின்றனர். ஆனால் இன்றளவும் பெண் குழந்தைகளை விளையாட்டு பயிற்சிக்காக பெற்றோர் வெளியே அனுப்புவது கிடையாது. இது பெண்களின் விளையாட்டு திறமையை மிகவும் குறைத்து, அவர்களை விளையாட்டில் சாதிக்க முடியாத அளவிற்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தி விடுகிறது. எனவே பெற்றோர் விளையாட்டு என்பது ஆண்களுக்கு மட்டும் கிடையாது பெண்களுக்கும் அதில் பங்கு உள்ளது. அவர்களுக்கும் உரிமை உள்ளது. அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை உணர வேண்டும்.

* சாதிக்கும் வழி
விளையாட்டு என்பது வெறும் போதுபோக்காக மட்டுமல்லாமல் தற்போது அது ஒரு சாதனை நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. தற்போது நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கூட யாரோ ஒரு வீரர் இந்திய நாட்டிற்காக வெண்கலம் வாங்குகிறார் என்றால் அவர் யார் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் எனத் தேடிப் பிடித்து அவரைப் பற்றி அனைவரும் பேசுகின்றனர். அந்த அளவிற்கு சாதனை என்பது பேசப்படுகிறது.

இதேபோன்று உடல் ரீதியாக சில குறைபாடுகளை கொண்ட மாணவர்களும், விளையாட்டில் சாதித்ததை நாம் பார்த்திருப்போம். பேரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய நாட்டிற்காக மாரியப்பன் தங்கப்பதக்கம் வாங்கி தந்தது இதுநாள் வரை நம்மால் மறக்க முடியாது. திறமையும், முயற்சியும் இருந்தால் அவர்களுக்கான வழிகாட்டல் கிடைக்கும்போது மாணவர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

சமீப காலமாக பிர்த்தியானந்தா, குக்கேஷ், வைஷாலி, ரமேஷ்பாபு போன்ற இளைய தலைமுறையினர் விளையாட்டில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகின்றனர். இவர்கள் 3 பேருமே ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்கள். இது அந்தப் பள்ளிக்கும் பெருமை. சில பள்ளிகளில் விளையாட்டை நன்கு ஊக்குவிக்கின்றனர். சில பள்ளிகளில் இதை தவிர்க்கின்றனர். குழந்தைகளுக்கு விளையாட்டு ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். அதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில் அவர்கள் ஏதாவது ஒரு சேட்டை குறும்பு போன்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர்.

 

The post சிறு வயதிலேயே உடல் பருமன் மற்றும் இதய நோய் அதிகரிப்பு: உடற்பயிற்சி விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க தவறும் இளைய தலைமுறை:மருத்துவர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பெரும் பூநாரை (Greater Flamingo)