×
Saravana Stores

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 23ம் தேதி கவுன்சலிங் தொடக்கம்

சென்னை: யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (பிஎன்ஒய்எஸ்) படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் மூலம் நடத்தப்படும் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பு (பிஎன்ஒய்எஸ்) படிப்பில் 2024-2025ம் ஆண்டில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இந்த படிப்புக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் நேற்று மாலை வெளியிட்டார்.

இப்படிப்பில் சேர்ந்து படிக்க அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2320 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 1243 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இதற்கான கட்ஆப் 198.50ல் இருந்து தொடங்குகிறது. அதேபோல நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர 1187 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 1173 ஏற்கப்பட்டன. இதற்கான கட்ஆப் மதிப்பெண்கள் 195ல் தொடங்குகிறது. அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அப்சர்பேகம் 198.50 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஜெயவனிதா 195.00 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

தரவரிசைப் பட்டியல் தொடர்பான விவரங்கள் அனைத்தும், www.tnhealth.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட படிப்புக்கு மொத்த இடங்கள் 1660 இடங்கள் உள்ளன. இந்த படிப்பை நடத்தும் 2 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 160 இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லூரிகள் 16 உள்ளன. இவற்றில் 960 இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 540 ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மேற்கண்ட படிப்புக்்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் 23ம் தேதி தொடங்க உள்ளது. முதல் நாளில் சிறப்பு பிரிவினருக்கும், 24ம் தேதி பொதுப்பிரிவினருக்கும், 26ம் தேதி மற்றும் 27ம் தேதிகளி்ல் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கவுன்சலிங் நடக்கும்.

The post யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 23ம் தேதி கவுன்சலிங் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Public Welfare Minister ,M. Subramanian ,Directorate of Indian Medicine and Homeopathy… ,
× RELATED தமிழக மருத்துவத் துறை குறித்து...