மாதவரம் அருகே 12 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் குடிநீர் தொட்டி பணியை விரைந்து முடிக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

புழல்: மாதவரம் அருகே, குடிநீர் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி பணியை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாதவரம் மண்டலம் 32வது வார்டு செங்குன்றம்-வில்லிவாக்கம் சாலை லட்சுமிபுரம் பகுதியில் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ராட்சத குடிநீர் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி கடந்த 12 ஆண்டுக்கு முன்பு கட்டும் பணி துவங்கியது. தற்போது 90 சதவீத பணி முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள பணி நடந்து வருகிறது. குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணி நிறைவடைந்தால், லட்சுமிபுரம் மற்றும் சுற்றியுள்ள நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்கும்.

எனவே, ராட்சத குடிநீர் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி பணியை விரைவில் முடிந்து தினமும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சசிதரன் கூறுகையில், ‘‘மாதவரம் மண்டலம் 33 வது வார்டு லட்சுமிபுரம் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டி பணி தொடங்கப்பட்டு, இதுவரை அப்பணி முழுமை பெறவில்லை. இதனால் இந்த பகுதியில் சுகாதாரமான குடிநீருக்காக பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக லட்சுமிபுரம் டீச்சர்ஸ் காலனி, கல் பாளையம், ஸ்டார் விஜய் நகர், சரஸ்வதி நகர், சப்தகிரி நகர், செல்வம் நகர், ரமணி நகர், செகரட்டரி காலனி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு இதனால் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. குடிநீருக்காக கட்டணம் செலுத்தி வருகிறோம். ஆனால் குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டி பணி தாமதமாக நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டி பணிகளை விரைந்து முடித்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என கூறினார்.

The post மாதவரம் அருகே 12 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் குடிநீர் தொட்டி பணியை விரைந்து முடிக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: