தொழிலாளர்கள் நலன் காக்க சட்டப்பேரவையில் தீர்மானம்: வைகோ வேண்டுகோள்

சென்னை: தொழிலாளர் நலன் காக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலைஞர் அரசு உருவாக்கித் தந்த தொழிலாளர் தொழில் வாரியான அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியங்களை பாதுகாத்து, மாநில தொழிலாளர் சட்டங்களான தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சட்டம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நலச் சட்டம், தமிழ்நாடு மீன் தொழிலாளர் நல சட்டம் ஆகியவைகளை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழ்நாடு அமைப்புச் சாரா தொழிலாளர் கூட்டமைப்பு நீண்ட காலமாக அறவழியில் போராடி வருகிறது.

பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு, தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல், கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றியுள்ள அநீதிகளுக்கு எதிராகவும், அமைப்புச் சாரா தொழிலாளர் கூட்டமைப்பு தொடர்ந்து போர்க்குரல் எழுப்பி வருகிறது. ஒன்றிய அரசின் தொழிலாளர் நல 44 சட்டங்களை ரத்து செய்து, கொண்டு வரப்பட்ட 4 தொகுப்புச் சட்டங்களையும் புறக்கணித்து, கலைஞர் அரசு நிறைவேற்றிய 36 நலவாரியங்களையும் பாதுகாப்பதற்கு தமிழ்நாடு அரசு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிச் செயல்படுத்த வேண்டும் என்ற இந்த கூட்டமைப்பின் வேண்டுகோளை மதிமுக ஆதரிக்கிறது.திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தொழிலாளர் கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தர கேட்டுக் கொள்கிறேன்.

The post தொழிலாளர்கள் நலன் காக்க சட்டப்பேரவையில் தீர்மானம்: வைகோ வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: