பெண்கள் ஒரு ‘சட்டப் பயங்கரவாதத்தை’ உருவாக்கியுள்ளனர்; பழிவாங்கும் அஸ்திரமாக மாறும் வரதட்சணை கொடுமை வழக்குகள்: அதிருப்தி தெரிவிக்கும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள்

சிறப்பு செய்தி
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வரதட்சணை கொடுமை என்பது பெரும் பிரச்ைனயாக உருவெடுத்து நிற்கிறது. அதிலும் குறிப்பாக வரதட்சணை கேட்டு மிரட்டிய மாமியார், கணவர் கைது என்பது போன்ற செய்திகளும், தகவல்களும் தினமும் ஏதாவது ஒரு மூலையில் தென்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதேபோல் காவல் நிலையங்களிலும் வரதட்சணை குறித்த புகார்கள் குவிந்து வருகிறது. கோர்ட்டுகளிலும் வரதட்சணை மற்றும் விவாகரத்து தொடர்பான வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்ேட போகிறது. அதே நேரத்தில் வரதட்சணை புகார் தொடர்பான கைது நடவடிக்கைகளும் அதிகரித்து வருகிறது.

பெண் வீட்டாரிடம் வலுக்கட்டாயமாக வாங்கப்படும் வரதட்சணை என்பது பெரும் கொடுமை. கண்டிப்பாக இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. அதேநேரத்தில் சமீப காலமாக மாமியார் மற்றும் கணவரை பழிவாங்க மருமகள்கள் பயன்படுத்தும் ஆயுதமாக வரதட்சணை புகார்கள் மாறி வருகிறது என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களில், பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து பாதுகாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 498-ஏ பிரிவு தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக பல்வேறு மாநில ஐகோர்ட்டுகள் தெரிவித்திருக்கின்றன. 498-ஏ பிரிவை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் பெண்கள் ஒரு ‘சட்டப் பயங்கரவாதத்தை’ உருவாக்கியுள்ளனர் என்று ெகால்கத்தா ஐகோர்ட் கூறியிருந்தது. முன்னதாக, சுப்ரீம் கோர்ட்டும் இந்த வாசகத்தைப் பயன்படுத்தியிருந்தது.

இதுபோன்ற வழக்குகளில் ஒரு தம்பதியுடன் ஒரே வீட்டில் வாழாத கணவரின் உறவினர்கள் அனைவரும் குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்று மும்பை ஐகோர்ட் கூறியிருந்தது. ஒரு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கை அந்த கோர்ட் தள்ளுபடி செய்தது. இதுபோன்ற பல வழக்குகளில், ‘குற்றச்சாட்டுகள் பொதுவானவை’ என்றும் ‘தெளிவற்றவை’ என்றும் கோர்ட்டுகள் பதிவு செய்துள்ளன. கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு வந்த ஒரு வழக்கில், வன்முறை நடந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. குடும்ப வன்முறை சார்ந்த வழக்குகளில், இந்தச் சட்டம் சமூக கட்டமைப்பில் தடைகளை உருவாக்குகிறது’ என்று கூறியிருந்தது. ‘திருமணம் தொடர்பான அனைத்து வழக்குகளும், வரதட்சணை துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளும், ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன. வரதட்சணை கொடுமை தொடர்பான சட்டத்தின் தவறான பயன்பாடு இப்படியே தொடர்ந்தால், அது திருமண அமைப்பையே முற்றிலும் அழித்துவிடும்’ என்று அலகாபாத் ஐகோர்ட் தெரிவித்திருந்தது. கோர்ட்டுகள் முன்வைத்துள்ள கூற்று, வரதட்சணை கொடுமை சட்டம் குறித்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் என்ன?
‘‘வரதட்சணை வழக்குகளை பொறுத்தவரை பல சந்தர்ப்பங்களில், உடல் ரீதியான துன்புறுத்தலின் தெளிவான அறிகுறிகள் தென்பட்ட பின்னரே காவல்துறை புகார்களை பதிவு செய்கிறது. எப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பு போலீசார் அடிக்கடி சர்ச்சையைத் தீர்க்க முயற்சி செய்கிறார்கள். பெண்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அறிவுரை வழங்குகின்றனர். பல இடங்களில் இது தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. ‘தவறான’ அல்லது ‘தவறான புரிதல்’ என்று கூறி மூடப்பட்ட வழக்குகளில், கணவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினரிடமிருந்து வன்முறை இருக்கவே செய்தது. ஆனால், சட்டப்பிரிவு 498-ஏவை அமல்படுத்த, வரதட்சணைக் குற்றச்சாட்டைச் சேர்க்க வேண்டும் என்று சில பெண்களிடம் வழக்கறிஞர்கள் சொல்கின்றனர். இதுவும் வரதட்சணை கொடுமை வழக்குகள் அதிகம் வருவதற்கு முக்கிய காரணம்,’’ என்கின்றனர் காவல்துறையினர்.

குட்டு வைத்த கோர்ட்
உத்தரபிரதேசத்தில், மாமனார் ₹50 லட்சம் வரதட்சணை கேட்டதாகவும், அவ்வளவு பணத்தை கொண்டு வர முடியாததால், கணவர் மற்றும் மாமனார் தன்னை அடித்து, துன்புறுத்தியதாகவும் மனைவி புகார் அளித்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் அனுமதியின்றி கணவன் தாம்பத்ய உறவு கொண்டதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், உடல் ரீதியான வன்கொடுமை மற்றும் வரதட்சணைக் கொடுமை தொடர்பாக அந்தப் பெண் அளித்திருந்த வாக்குமூலத்தில் முரண்பாடுகள் உள்ளதால் கணவன் குடும்பத்தினரை பழிவாங்கவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கோர்ட் தெரிவித்திருந்தது. இது தவிர, மாமியார் மற்றும் மாமனார் தம்பதியினருடன் மிகக் குறுகிய காலமே தங்கியிருந்தனர். கணவர் மீதான வழக்கு தொடர்ந்தாலும், மாமியார் மற்றும் மாமனார் மீதான வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

The post பெண்கள் ஒரு ‘சட்டப் பயங்கரவாதத்தை’ உருவாக்கியுள்ளனர்; பழிவாங்கும் அஸ்திரமாக மாறும் வரதட்சணை கொடுமை வழக்குகள்: அதிருப்தி தெரிவிக்கும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் appeared first on Dinakaran.

Related Stories: