×

அடுத்தடுத்து தேர்தல்கள் வரவுள்ளதால் ‘காஸ்’ விலையை போல் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?: தீபாவளிக்கு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

டெல்லி: அடுத்தடுத்து தேர்தல்கள் வரவுள்ளதால் காஸ் விலையை போல் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும், தீபாவளிக்கு அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசு சார்பில் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எல்பிஜி காஸ் சிலிண்டரின் விலையை ரூ.200 குறைத்தது. ஆனால் நாட்டின் பணவீக்க விகிதம் பெரும் சவாலாக உள்ளது. ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த பணவீக்கமானது இந்திய ரிசர்வ் வங்கியின் 4 முதல் 6 சதவீத வரம்பிற்கு அதிகமாக உள்ளது.

இருந்தும் காஸ் விலை குறைக்கப்பட்டதால், பெட்ரோல், டீசல் விலை குறையும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. தற்போது டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.72க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.89.62க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை 3 முதல் 5 ரூபாய் வரை குறைக்கப்பட்டால், மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்கின்றனர். இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், ‘பணவீக்கத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். இன்னும் 10 மாதங்களில் மக்களவை, 5 மாநில சட்டப் பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. சமீபத்தில் காஸ் விலை குறைக்கப்பட்டது போல், பெட்ரோல்-டீசல் விலை குறையும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 3 முதல் 5 ரூபாய் வரை குறைக்கப்படலாம். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அல்லது வாட் வரியை குறைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு செய்வதால் ஒன்றிய, மாநில அரசின் கருவூலத்தின் மீதான சுமையை அதிகரிக்கும். ஏனெனில் கச்சா எண்ணெய் விலை கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக, ரஷ்யாவும், சவூதி அரேபியாவும், ஆண்டு இறுதி வரை எண்ணெய் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளன’ என்று அவர்கள் கூறினர்.

The post அடுத்தடுத்து தேர்தல்கள் வரவுள்ளதால் ‘காஸ்’ விலையை போல் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?: தீபாவளிக்கு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Diwali ,Dinakaran ,
× RELATED தீபாவளி பண்டிகை விற்பனை