×

சட்டீஸ்கரில் 36 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை: சிறப்பு படை போலீஸ் அதிரடி

தண்டேவாடா: சட்டீஸ்கர் வனப்பகுதியில் போலீசாருக்கு மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நேற்று பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 36 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாராயண்பூர்- தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் அபுஜ்மாத் வன பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் திடீரென அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அபுஜ்மாத் வன பகுதியில் அதிரடி படையினரும், போலீசாரும் நேற்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். துல்துலி, நெந்தூர் ஆகிய கிராமங்களுக்கு இடையே உள்ள பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீது மாவோயிஸ்டுகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால், மூண்ட பயங்கர துப்பாக்கி சண்டை பல மணி நேரம் நீடித்தது. தாக்குதலில் 36 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். தண்டேவாடா எஸ்பி கவுரவ் ராய்,‘‘ நேற்று மதியம் 1 மணிக்கு என்கவுன்டர் தொடங்கியது. இதில் இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நீடித்தது’’ என்றார்.

பஸ்தார் ஐஜி சுந்தர்ராஜ் கூறுகையில், ‘‘என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து ஏகே-47 ரைபிள்கள்,எஸ்எல்ஆர் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன’’ என்றார். போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘‘வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. வனப்பகுதிக்குள் படையினர் முன்னேறியதும் மாவோயிஸ்டுகள் சுடத் தொடங்கினர்.இதையடுத்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. தேடுதல் நடவடிக்கை முடிந்த பிறகு, என்கவுன்ட்டர் குறித்த முழுமையான தகவல்கள் வெளியிடப்படும்” என்றனர்.

* இந்த ஆண்டு மட்டும் 185 பேர் பலி
சட்டீஸ்கரின் பஸ்தார் பகுதியில் உள்ள நாராயண்பூர்,தண்டேவாடா ஆகிய இடங்களில் இந்த ஆண்டில் மட்டும் தனித்தனியே நடந்த என்கவுன்டர் சம்பவங்களில் மொத்தம் 185 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். அரசு தரவுகளின்படி, டிசம்பர் 2023 முதல் இதுவரை 723 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 622 பேர் போலீஸ், பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

* 2026க்குள் முற்றிலும் ஒழிப்பு
கடந்த ஆகஸ்ட் மாதம் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது தொடர்பாக மாநில டிஜிபிக்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் நடந்தது. இதில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நக்சலிசம், மனிதகுலம் மற்றும் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. மோடி அரசின் கொள்கைகள் காரணமாக, இடதுசாரி தீவிரவாதம் இப்போது சட்டீஸ்கரில் சில மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. மாவோயிஸ்டுளை ஒடுக்க உறுதியான, கடுமையான தாக்குதல் உத்திகள் வகுக்கப்பட்டு வருகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. வரும் 2026 மார்ச் மாதத்திற்குள் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க ஒன்றிய அரசு உறுதிபூண்டுள்ளது’’ என்றார்.

* போலீசுக்கு பாராட்டு
சட்டீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு தேவ் சாய் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடுகையில், நாராயண்பூர்-தண்டேவாடா மாவட்ட எல்லையில் மாவோயிஸ்ட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர். பாதுகாப்பு படையினரின் துணிச்சல் மிகுந்த நடவடிக்கைக்காக அவர்களை வாழ்த்துகிறேன். மாவோயிஸ்டுகளை மாநிலத்தில் இருந்து அழிப்பதே அரசின் நோக்கம்.இந்த விஷயத்தில் இரட்டை இன்ஜின் அரசு உறுதியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

The post சட்டீஸ்கரில் 36 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை: சிறப்பு படை போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Maoists ,Chhattisgarh ,Thandewada ,Abujmat ,Narayanpur-Dandewada ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலத்தில் 30...