காய்கறி மற்றும் கரும்பு லாரிகளை வழி மறிப்பதற்காக புத்திசாலித்தனமாக காத்திருக்கும் காட்டு யானைகள்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுவது வழக்கம். வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மித வேகத்தில் இயக்குவதற்காகவும், வனவிலங்குகள் சாலையை கடப்பதால் விபத்துக்களை தடுக்க சாலையின் குறுக்கே ஆங்காங்கே வேகத்தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. காட்டு யானைகள் வனச்சாலையில் பயணிக்கும் காய்கறி வாகனங்கள் மற்றும் கரும்பு லாரிகளை வழிமறித்து தும்பிக்கையால் கரும்பு மற்றும் காய்கறிகளை பறித்து தின்பது தொடர்கதையாக உள்ளது.

அப்போது வாகன ஓட்டுனர்கள் காட்டு யானைகளிடம் சிக்காமல் லாவகமாக வாகனங்களை வேகமாக இயக்கி யானையிடம் இருந்து தப்பித்து விடுகின்றனர். இதற்கிடையே சாலையில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள வேகத்தடுப்புகளின் அருகே செல்லும்போது வாகனங்கள் மித வேகமாக இயக்குவதை கண்டுபிடித்த புத்திசாலி காட்டு யானைகள் வேகத்தடுப்புகளின் அருகே நின்று வாகனங்களை வழிமறிக்க தொடங்கியுள்ளன. இன்று அதிகாலை பண்ணாரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காய்கறி வாகனத்தை ஒரு காட்டு யானை வேகத்தடுப்பின் அருகே வழிமறிக்க முயன்றது. மேலும் காட்டு யானைகள் தங்களது குட்டிகளுடன் வேகத்தடுப்புகளின் அருகே சாலையில் முகாமிட்டுள்ளன. காட்டு யானைகள் புத்திசாலித்தனமாக வேகத்தடுப்புகள் அருகே முகாமிட்டுள்ளதை கண்டு வாகன ஓட்டுநர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

The post காய்கறி மற்றும் கரும்பு லாரிகளை வழி மறிப்பதற்காக புத்திசாலித்தனமாக காத்திருக்கும் காட்டு யானைகள் appeared first on Dinakaran.

Related Stories: