– ஜெ.மணிகண்டன், வேலூர்.
முதலில் லக்னம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தை பிறக்கின்ற பகுதியில், பிறக்கின்ற நேரத்தில், கிழக்குத் திசையில் என்ன ராசிமண்டலம் என்பது சென்று கொண்டு இருக்கிறதோ அதுவே ஜென்ம லக்னமாக கொள்ளப்படுகிறது. பூமி என்பது தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. இந்த அண்டம் என்பதும் சுழன்று கொண்டே இருக்கிறது. இந்த அண்டத்தைத்தான் 12 ராசி மண்டலங்களாக பிரித்து வைத்திருக்கிறார்கள். அண்டமும் சுழல்கிறது, பூமியும் சுழல்கிறது. அப்படியே கற்பனை செய்து பாருங்கள். ஜோதிடம் என்பது ஒளி அறிவியல் ஆகும். அந்த ஒளியைத் தருவது சூரியன். ஆக குழந்தை பிறந்த பகுதியில் சூரிய உதயம் என்பது எத்தனை மணிக்கு ஆகிறதோ, அதிலிருந்துதான் லக்னமானம் என்பதும் கணக்கிடப்படும். சூரிய உதயம் என்பது இடத்திற்கு இடம் மாறுபடுவதால், சூரிய உதயத்தைப் பொறுத்து லக்னம் என்பதும் மாறுபடும். இந்த லக்னம் என்பதுதான் ஜாதகப் பலன்களை அறிவதற்கு அடிப்படை என்பதால் அதனை மிகவும் துல்லியமாகக் கணக்கிட வேண்டியது அவசியம்.
?ஒரேயொரு பாத்திரத்தை ஏன் பஞ்ச பாத்திரம் என்று அழைக்கிறார்கள்?
– ரமேஷ் ஸ்ரீ நிவாஸன், விருத்தாசலம்.
“பஞ்சா’’ என்றால் ஐந்து என்று மட்டுமல்ல, அகலமான என்ற பொருளும் உண்டு. பஞ்ச பாத்திரம் என்றால் ‘வாய் அகன்ற பாத்திரம்’ என்று பொருள். இது ஐந்து பாத்திரங்களோ அல்லது ஐந்து விதமான உலோகங்களின் கலவையோ அல்ல. அதே போல, அதனுடன் இணையாக இருக்கும் சின்னஞ்சிறு கரண்டிக்கு உத்தரணி என்று பெயர். உத்தரணி என்றால், நீரை எடுக்க உதவும் சிறு கரண்டி என்று பொருள் கொள்ளலாம். சிலர் இதனை ருத்ரணி என்றும் சொல்வர். ருத்ரனின் அணிகலன் ஆன பாம்பின் உருவினைக் கொண்டு இந்த சிறு கரண்டி வடிவமைக்கப்பட்டிருக்கும். பாற்கடலைக் கடையும்போது பாம்பின் துணை கொண்டு கடைந்துதானே அமிர்தத்தை எடுத்தார்கள். அதுபோல பஞ்சபாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தை எடுக்கும்போது அது அமிர்தமாக வரவேண்டும் என்பதால் பாம்பின் உருவில் அதனை வடிவமைத்தார்கள் என்பது அதற்கான விளக்கம். இந்த பஞ்சபாத்திரம் என்பது நித்யகர்மானுஷ்டத்திலும் பூஜையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.
இறைவனை முறைப்படி பூஜை செய்து வழிபடும்போது, முதலில் அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லி தியானிப்பார்கள். உதாரணத்திற்கு பிள்ளையார் பூஜை செய்யும்போது விநாயகாய நம: த்யாயாமி (விநாயகப் பெருமானே உம்மை தியானிக்கிறேன்), ஆவாஹயாமி (ஆவாஹனம் செய்கிறேன்), ஆஸனம் சமர்ப்பயாமி (உட்காருவதற்கு ஆசனம் அளிக்கிறேன்) என்று சொல்லி அழைப்பார்கள். விநாயகப் பெருமான் வந்து ஆசனத்தில் அமர்ந்துவிட்டதாக எண்ணி அடுத்து வருகின்ற பஞ்ச உபசாரம் என்ற பூஜைகளைச் செய்வார்கள். அதாவது ஒரு விருந்தினர் நம் வீட்டிற்குள் வந்தவுடன் அவர்களை ‘வாங்க வாங்க’ என்று வரவேற்று உட்காருங்கள், தண்ணீர் குடியுங்கள் என்று முதலில் உபசாரம் செய்வோம் அல்லவா, அதே போல இறைவன் நம் வீட்டிற்குள் வந்தவுடன் அவருக்கு பாதபூஜை செய்யும் விதமாக பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி (உம்முடைய பாதத்தில் தீர்த்தம் விட்டு அலம்புகிறேன்), ஹஸ்தயோ: அர்க்யம் சமர்ப்பயாமி (கைகளை அலம்பிக்கொள்ள தீர்த்தம் விடுகிறேன்), முகே ஆசமனீயம் சமர்ப்பயாமி (முகம் வாய் அலம்ப தீர்த்தம் தருகிறேன்), சுத்தோதக ஸ்நானம் சமர்ப்பயாமி (ஸ்நானம் செய்ய சுத்தமான தண்ணீரை விடுகிறேன்), ஸ்நான அனந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி (இறுதியாக மீண்டும் ஜலம் விடுகிறேன்) என்று ஐந்து முறை உத்தரணியினால் தீர்த்தம் விடுவார்கள். இந்த ஐந்து விதமான பஞ்ச உபசாரத்தினைச் செய்வதற்கு துணையாக இந்த பாத்திரம் பயன்படுவதால் ஐந்து என்ற அர்த்தத்தோடு இதனை பஞ்சபாத்திரம் என்று அழைப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.
?ததாஸ்து என்றால் என்ன?
– அனந்தநாராயணன், சிதம்பரம்.
ததாஸ்து என்றால் அப்படியே ஆகட்டும் என்று பொருள். நம் வீட்டினில் எப்போதும் ஒரு தேவதை நம்மைச் சுற்றி இருந்துகொண்டே இருக்கும். நாம் எதைச் சொன்னாலும் ‘ததாஸ்து’ என்று பிரதிவசனம் சொல்வதே அந்த தேவதையின் பணி. அதாவது அப்படியே ஆகட்டும் என்று ஆமோதிப்பதே அந்த தேவதைக்கு விதிக்கப்பட்ட வேலை என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனால்தான் நாம் எதைப் பேசினாலும் மங்களகரமானதாக இருக்க வேண்டும், நாம் சொல்வது நல்வாக்காக இருக்க வேண்டும் என்று சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள் அறிவுறுத்துகிறார்கள். உதாரணத்திற்கு பக்கத்து வீட்டுக்காரர் ஏதோ ஒரு பொருளை நம்மிடம் கடனாகக் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு கேட்கும்போது ‘என்னிடம் சுத்தமாக இல்லை’ என்று சொல்லக்கூடாது. அப்படிச் சொல்லும்போது அப்படியே ஆகட்டும் என்று அந்த தேவதை ஆசிர்வதிப்பதால் அவ்வாறே நடந்துவிடும்.
நமக்குத் தருவதற்கு விருப்பம் இல்லையென்றாலும் அல்லது உண்மையிலேயே இல்லை என்றாலும் இப்படிச் சொல்லிப்பாருங்கள் “எங்களிடம் நிறைய இருந்தது.. தற்போது திரும்பவும் வாங்கி வரவேண்டும்” என்று சொல்ல வேண்டும். பணமாகக் கடன் கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், “உங்களுக்கு தரும் அளவிற்கு என்னிடம் பணம் மிகுதியாக வந்து சேர வேண்டும்” என்று சொல்லிப் பாருங்கள். நம் வீட்டினில் குறைவில்லாத செல்வம் வந்து சேரும். அதனை விடுத்து இல்லை என்று சொல்வதால் இருப்பதும் இல்லாமல் போய்விடும். எப்போதும் மங்களகரமான வார்த்தைகளேயே பேசவேண்டும். அவ்வாறான வார்த்தைகளால் உண்டாகும் அதிர்வலைகள் நம் குடும்பத்தை சந்தோஷமாய் வைத்திருக்கும்.
The post ஏன் எதற்கு எப்படி appeared first on Dinakaran.