எடை குறைவதால் கடை ஊழியர்கள் பாதிப்பு அனைத்து ரேஷன் பொருட்களையும் பாக்கெட்டில் வழங்க வேண்டும்: தொமுச கோரிக்கை

சென்னை: பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அனைத்து பொருட்களையும் பாக்கெட்டுகளில் அடைத்து வழங்க வேண்டும் என்று துறை அமைச்சருக்கு தொமுச சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டியுசிஎஸ் தொமுச பொதுச்செயலாளர் ராஜன் சாமிநாதன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் சிவில் சப்ளை நிறுவனத்தின் சார்பாக சென்னையில் நந்தனம், விருகம்பாக்கம், அண்ணாநகர், தங்கசாலை, கோபாலபுரம், சுங்கச்சாவடி, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் கிடங்குகள் மூலமாகவே அனுப்பப்படுகிறது.

இந்த கிடங்குகளில் ரேஷன் கடைகளுக்கு எடை குறைவோடு பொருட்களை அனுப்புவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி அதிகபட்சம் 5 கிலோ, சர்க்கரை 3.5 கிலோ, து.பருப்பு, கோதுமை 2.5 கிலோ அளவில் ஒவ்வொரு மூட்டையிலும் எடை குறைவாக வருகிறது. தரமான அரிசி என்றால் 5 கிலோ எடை குறைகிறது. இதுகுறித்து விசாரிக்க வேண்டிய விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தால் அந்த தகவலை முன்கூட்டியே சொல்லிவிட்டு வருவதால் அன்று முழுவதும் எல்லாம் சரியாக நடந்துவிடும். ஆனால் நகர்வு இருக்காது.

இதுபோன்று மூட்டைகளில் பொருள் குறைவாக வருவதால் ரேஷன் கடை ஊழியர்களிடமே அபராதம் வசூலிக்கப்படுகிறது. சர்க்கரை மூட்டைகளில் கை ஊக்கு பயன்படுத்தி சர்க்கரையை எடுத்து செல்லும் சம்பவமும் கிடங்கில் நடக்கிறது. இந்த அனைத்து குறைகளையும் கிடங்கு பணியாளர்கள் செய்யும்போது, இந்த பழி எல்லாம் ரேஷன் கடை பணியாளர்கள் மீது உணவு துறை அதிகாரிகள் சுமத்தும் நிலை உள்ளது. குறைந்த சம்பளத்திலும், மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் ரேஷன் கடை பணியாளர்களின் பிரச்னைகளை சந்திக்கும் நிலை உள்ளது. அதனால் ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் அனைத்து பொருட்களையும் பாக்கெட்டுகளில் அடைத்து வழங்கினால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இதற்கு துறை அமைச்சரும், உயர் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post எடை குறைவதால் கடை ஊழியர்கள் பாதிப்பு அனைத்து ரேஷன் பொருட்களையும் பாக்கெட்டில் வழங்க வேண்டும்: தொமுச கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: