டெல்லி: நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்ய பிரதமர் வயநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வானிலை சீரான பிறகு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பார்வையிடவுள்ளார். தொடர்ந்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலையில் திடீரென அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 152-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்க்கப்பட்ட பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று முதல் ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேரளாவில் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். முதற்கட்டமாக ஒன்றிய அமைச்சர் ஜார்ஜ் குரியனை அனுப்பி கேரளாவில் உள்ள நிலைமையை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஒருங்கினைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். நேற்று இரவு கேரளா சென்ற ஒன்றிய அமைச்சர் ஜார்ஜ் குரியன் தேசிய பேரிடர் மீட்பு குழுவுடன் ஒருங்கினைந்து மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து முதற்கட்ட அறிக்கையை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பினார். அதன் அடிப்படையில் பிரதமர் மோடி வயநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் தற்போது வானிலை மோசமாக உள்ளதால் வானிலை சீரான பிறகு பிரதமர் மோடி வயநாடு செல்லவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்ய பிரதமர் வயநாடு செல்லவுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.