×

விவசாயிகளை, தொழிலாளர்களை கொல்லும் ஒன்றிய அரசின் ஆயுதம் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி: ராகுல்காந்தி கடும் தாக்கு

ஜாம்ஷெட்பூர்: ஒன்றிய அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றின் கொள்கைகள் விவசாயிகள், தொழிலாளர்களை கொல்வதற்கான ஆயுதங்கள் என்று மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார பேரணியில் மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘‘நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுவதற்கு பிரதமர் மோடியின் கொள்கைகளே காரணமாகும். பணமதிப்பிழப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவை ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கொல்வதற்கான ஆயுதங்களாகும். சாதி, மதம் மற்றும் மொழியின் அடிப்படையில் இந்தியாவை பிளவுபடுத்த பாஜ, ஆர்எஸ்எஸ் அரசியல் செய்கின்றது. காங்கிரஸ் கட்சி இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு விரும்புகிறது. அதே நேரத்தில் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அதனை அழிப்பதில் குறியாக இருக்கிறது. இந்தியாவில் பாஜ மற்றும் இந்தியா கூட்டணியின் கொள்கைகளுக்கு இடையே ஒரு போர் நடந்து வருகின்றது. வன்முறைக்கும் ஒற்றுமைக்கும் இடையிலான போராகும். வெளிநாடுகளில் பணத்தை முதலீடு செய்யும் முதலாளிகளுக்கு மோடி உதவி செய்கிறார். அவர்களது ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன” என்றார்.

ராகுலின் 4வது தலைமுறை வந்தால் கூட முடியாது
ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறுகையில்,’ தேர்தல் பிரச்சாரங்களின்போது ராகுல் காந்தி அரசியல் சாசன புத்தகத்தைக் காட்டுகிறார். ஆனால், அந்த புத்தகம் உண்மையில் அரசியல் சாசன புத்தகம் அல்ல. எந்த உள்ளடக்கமும் இல்லாத அந்த புத்தகத்தின் அட்டையில் இந்திய அரசியலமைப்பு என்று எழுதப்பட்டுள்ளது. ஓபிசி, பழங்குடியினர் மற்றும் தலித்துகளின் இடஒதுக்கீட்டைப் பறிக்கும் கெட்ட நோக்கம் காங்கிரசுக்கு உள்ளது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை பாஜ ஒருபோதும் அனுமதிக்காது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. உங்களின் நான்காவது தலைமுறை கூட, சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வர முடியாது என்று ராகுல் காந்தியை நான் எச்சரிக்கிறேன்’ என்றார்.

The post விவசாயிகளை, தொழிலாளர்களை கொல்லும் ஒன்றிய அரசின் ஆயுதம் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி: ராகுல்காந்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Rahul Gandhi ,Jamshedpur ,Lok Sabha ,Opposition ,Union government ,Congress ,Jamshedpur, Jharkhand ,Dinakaran ,
× RELATED பிஎஸ்என்எல் நிறுவன இடங்களை ஒன்றிய...